அவசரகால சட்டத்தால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் முறையிடுங்கள்
அவசரகாலச் சட்டத்தின் கீழ் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக நம்பும் எவரும் தமது பிராந்திய அல்லது தலைமை பணியகத்தில் முறைப்பாடு செய்யலாம் என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ள, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும் ஆணையாளருமான, நிமால் புஞ்சிஹேவ, அவசரகால விதிமுறைகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ், இதுபோன்ற எந்தவொரு முறைப்பாட்டையும் விசாரிக்க ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கும்போது கூட, தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உணர்ந்தால் எவரும் எங்களுக்குத் தெரிவிக்கலாம்.
அதை விசாரிப்பது எங்கள் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்ட அவசரகால விதிமுறைகளில், அரசியலமைப்பிற்கு முரணான விதிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், முதல் வாசிப்பில் பல உட்பிரிவுகள் சிக்கலாகத் தோன்றுவதாகவும் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்திருந்தார்.
அவசரகாலச் சட்டம் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அரசு திறமையாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும், ஆனால் அது அரசியலமைப்பு வரம்புகளை மீறக்கூடாது. அந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தற்போதைய விதிமுறைகளின் சில பிரிவுகள் ஆயுத மோதல்களின் போது பயன்படுத்தப்படும் நடவடிக்கைகளை ஒத்திருக்கின்றன.
அவை இயற்கை பேரழிவு காரணமாக அறிவிக்கப்பட்ட அவசரநிலைக்கு பொருத்தமற்றவை என்றும் நிமால் புஞ்சிஹேவ, தெரிவித்துள்ளார்.
