மேலும்

பேரிடர் நிவாரண வழங்கலில் என்பிபி அரசியல்வாதிகள் தலையீடு

உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிராமப்புற செயற்பாட்டாளர்களின் கடுமையான தலையீடுகளால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு  இழப்பீடு வழங்குவதில்  சிக்கல்  ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா கிராம அதிகாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் சுமித் கொடிகார குற்றம்சாட்டியுள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தலையீடுகள் காரணமாக, கிராம அதிகாரிகளால் தங்கள் சேவைகளை முறையாகவும் நியாயமாகவும் செய்ய முடியவில்லை.

பேரிடரால் பாதிக்கப்படாத தங்கள் நெருங்கிய கூட்டாளிகளுக்கு, பேரிடர் நிவாரண விண்ணப்பங்களை செயற்படுத்துமாறு நாடு முழுவதும் பல பகுதிகளில் உள்ள கிராம அதிகாரிகள் மீது, இந்தக் குழுக்கள் கடுமையான அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.

பிரஜாசக்தி குழுக்களின் உறுப்பினர்கள் இந்த இழப்பீட்டு தொகை செலுத்தும் நடவடிக்கைகளில், கணிசமாக தலையிடுகின்றனர். இது சட்டவிரோதமான சூழ்நிலையை உருவாக்குகிறது.

கிராம அதிகாரிகள் தங்கள் கடமைகளை நியாயமாகச் செய்ய எந்த வழியும் இல்லை.

இது கட்டுப்பாடில்லாமல் தொடர்ந்தால், நாட்டில் உள்ள தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்புடைய அனைவருக்கும் பேரிடர் இழப்பீடு வழங்கப்பட வேண்டியிருக்கும்.

பேரிடரால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட போதிலும் கிராம அதிகாரிகள் இந்தக் கடமைகளைச் செய்து வருகின்றனர்.

கிராம சமூக மேம்பாட்டுக் குழுக்கள் பேரிடர் நிதியை வழங்கும் பணியில் ஈடுபடுவதற்கு எந்த சட்டப்பூர்வ ஏற்பாடும் இல்லை.

நாங்கள் அவர்களுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம், ஆனால் அவர்கள் பதவி அதிகாரத்தை எடுத்துக்கொள்ள நாங்கள் அனுமதிக்க முடியாது.

கிராம அதிகாரிகள் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சார்பற்றவர்கள். அவர்கள் தங்கள் கடமைகளை சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும், நியாயமாகவும் நிறைவேற்றக்கூடிய சூழலை உருவாக்குமாறு சிறிலங்கா அதிபரிடம்  கோரிக்கை விடுத்துள்ளதாகவும்,   சிறிலங்கா கிராம அதிகாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் சுமித் கொடிகார மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *