வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் மருத்துவமனையில் -பயணத் திட்டம் குழம்பியது
வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வத்திக்கானுடனான சிறிலங்காவின் 50 ஆண்டுகால உறவை நினைவுகூரும் வகையில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
நொவம்பர் 3 ஆம் திகதி சிறிலங்கா வந்த பேராயர் கல்லாகர், அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்தார்.
இதனையடுத்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், எஞ்சிய பயணத் திட்டங்களை அவரால் நிறைவு செய்ய செய்ய முடியவில்லை.
72 வயதான பேராயர் கல்லாகர், கொழும்புக்கு விமானத்தில் பயணித்த போது சிறியளவில் இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டார்.
அது மறுநாள் மிகவும் மோசமான சூழ்நிலையாக மாறியதாக தகவல் அறிந்த ஒரு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவத்தை அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
பேராயர் கல்லாகர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான தேவாலயங்களைப் பார்வையிடவும், கொழும்பில் உள்ள புனித லூசியா பேராலயத்தில் நன்றி தெரிவிக்கும் திருப்பலி நிகழ்வுகளில் பங்கேற்கவும், மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கவும் அவர் திட்டமிடப்பட்டிருந்தார்.
