இந்திய – சிறிலங்கா படைகளின் 11வது மித்ரசக்தி கூட்டுப் பயிற்சி நாளை ஆரம்பம்
இந்திய – சிறிலங்கா படைகள் ஆண்டு தோறும் இணைந்து நடத்தும் மித்ரசக்தி கூட்டுப் பயிற்சியின் 11 வது பயிற்சி, நாளை ஆரம்பமாகவுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவியில் நொவம்பர் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இரண்டு வாரங்கள் இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெறுகிறது.
“துணை மரபுசார் சூழ்நிலையில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு தரப்பினரின் கூட்டு இராணுவ திறனை மேம்படுத்துவதே இந்தக் கூட்டுப் பயிற்சியின் முக்கிய நிகழ்ச்சி நிரலாகும்.
மித்ர சக்தி 2025 கூட்டுப் பயிற்சியானது, நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற நிலப்பரப்புகளில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதில், இரு படைகளுக்கும் இடையிலான செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பயிற்சி, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான இந்தியா மற்றும் சிறிலங்காவின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அதே நேரத்தில் இரு படைகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, தோழமை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது” என்று இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சிறிலங்காவின் மாதுருஓயா பயிற்சி முகாமில் பத்தாவது மித்ரசக்தி கூட்டுப் பயிற்சி இடம்பெற்றிருந்தது.
இந்திய இராணுவத்தின் ராஜ்புத்ர படைப்பிரிவைச் சேர்ந்த 106 படையினருடன், சிறிலங்கா இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் ஒரு அணி இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கெடுத்திருந்தது.
