18 மில்லியன் டொலர் செலவில் 4 உலங்குவானூர்திகளை பழுதுபார்க்க அமைச்சரவை அனுமதி
சிறிலங்கா விமானப்படைக்கு அவசரமாகத் தேவைப்படும் நான்கு எம்.ஐ-17 (MI-17) உலங்குவானூர்திகளை பழுதுபார்க்க, 18 மில்லியன் டொலர் ஏலத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மிகக் குறைந்த மதிப்பீட்டை வழங்கிய பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் மெஸ்ஸஸ் வின்ஸ்லி டிபென்ஸ் குழுமத்தின் உள்ளூர் முகவர் மெஸ்ஸஸ் செகுராடெக் லங்கா நிறுவனத்திற்கு இந்த ஏலம் வழங்கப்பட்டுள்ளது.
நான்கு உலங்குவானூர்திகளையும் பழுதுபார்ப்பது மற்றும் ஆயுட்காலத்தை நீடிப்பற்குமான முழு செலவு சுமார் 18 மில்லியன் (ரூ. 5.4 பில்லியன்) டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உலங்குவானூர்திக்கும் சுமார் 4.5 மில்லியன் டொலர் செலவாகும்.
உலங்குவானூர்திகளின் போக்குவரத்துக்கான இரு வழி விமானப் போக்குவரத்து மற்றும் காப்புறுதிச் செலவையும் இந்த செலவு உள்ளடக்கியது.
2023 ஆம் ஆண்டில் கேள்விப்பத்திரங்கள் முதலில் கோரப்பட்ட போதிலும், அதிகாரத்துவ தடைகள் காரணமாக இந்த செயல்முறை தாமதமானது.
எம்.ஐ-17 உலங்குவானூர்திகளின் பழுதுபார்ப்பு அவசரமாக செய்யப்பட வேண்டும் என்று சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பழுதுபார்க்கும் பணிகள் மேலும் தாமதமானால், வெள்ள மீட்பு போன்ற உள்ளூர் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான பிற பணிகள் மற்றும் விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் ஐ.நா. நடவடிக்கைகள் தடைபடும் என்று விமானப்படை அதிகாரி ஒருவர் கூறினார்.
எம்.ஐ-17 உலங்குவானூர்திகளின் பழுதுபார்ப்பு மற்றும் சேவை ஆயுட்கால நீடிப்பு கேள்விப்பத்திரம தொடர்பான முழுமையான அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
இது குறித்த விபரங்கள் வாராந்த அமைச்சரவை மாநாட்டில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
