சிறிலங்காவின் தேயிலை உற்பத்தியைக் குறி வைக்கிறது சீனா
சிறிலங்காவின் தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்வது குறித்து சீன முதலீட்டாளர்கள் குழுவொன்று ஆராய்ந்துள்ளது.
சீன முதலீட்டாளர்களின் குழு, கடந்த 24ஆம் திகதி விவசாய அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சீன குழுவினர் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுடன், சிறப்பு கலந்துரையாடல் நடத்தியது.
சிறிலங்காவில் தேயிலை உற்பத்தி குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
சிறிலங்காவில் தேயிலை உற்பத்தி பெரிய அளவிலான, நடுத்தர அளவிலான மற்றும் சிறிய அளவிலான,என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு சிறிலங்கா 245 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்தது.
இது இந்தியா ஏற்றுமதி செய்த தேயிலையை விட 24 மில்லியன் கிலோ குறைவாகும். இந்தியா தேயிலை ஏற்றுமதியில் சிறிலங்காவை முந்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டில் உரத் தடையின் நீண்டகால விளைவுகளை மாற்றுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் நிவாரணம் இல்லாததே உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குக் காரணம் என்று தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், சிறிலங்காவின் பங்கு தரகு நிறுவனமான கபிடல் டிரஸ்ட் செக்யூரிட்டீஸ், இந்த ஆண்டு சிறிலங்காவின் தேயிலை உற்பத்தி 275-280 மில்லியன் கிலோவாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
