வன்னியில் மீட்கப்பட்ட 7000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கியின் பாதுகாப்பில்
போரின் போது சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட 7 ஆயிரம் தங்க பொருட்கள், மத்திய வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினால், நேற்று கொழும்பு தலைமை நீதிவான் அசங்கா போதரகமவிடம் இதுபற்றி அறிவிக்கப்பட்டது.
சிறிலங்கா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய இரத்தினக்கல் மற்றும் நகைகள் அதிகாரசபைக்கு அனுப்பப்பட்ட 10,000 தங்கப் பொருட்களில் 7,000 க்கும் மேற்பட்டவை மத்திய வங்கியின் காவலில் வைக்கப்பட்டுள்ளன என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
10,000 தங்கப் பொருட்களை எடைபோட்டு, அதில் உள்ள தங்கத்தின் அளவு மற்றும் எடை குறித்து தனது நீதிமன்றத்திற்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நீதிவானின் உத்தரவுக்கு இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த தங்கப் பொருட்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் சமீபத்தில் ஒரு பி அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.
இது தொடர்பான மேலதிக அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க குற்றவியல் புலனாய்வுப் பிரிவிற்கு நீதிவான் உத்தரவிட்டார்.