பிள்ளையானை கூண்டுக்குள் அனுப்பிய அருண் ஹேமச்சந்திரா?
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் உறவினர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமையவே, பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிள்ளையானின் சட்ட ஆலோசகராக இணைந்து கொண்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிள்ளையானை, அவர் கடந்த 13ஆம் திகதி காலை 10 மணியளவில் சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் உரையாடியிருந்தார்.
பிள்ளையானைச் சந்திக்க அவரது சட்டத்தரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவரது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு அமையவே, குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் இமேஷ முத்துமாலவிடம் தாம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே அந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையானின் சட்ட ஆலோசகராக தாம் இலவசமாக செயற்பட முன்வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்காக உதவிய அவருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முனைவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தாம் பிள்ளையானைச் சந்தித்த போது, 4 புலனாய்வு அதிகாரிகள் அருகில் இருந்தனர் என்றும், அவர்களில் ஒருவர் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் என்றும், அது அநீதியானது என சுட்டிக்காட்டிய போதும் அவர்கள் தனித்து பிள்ளையானைச் சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கூறுவது போல பிள்ளையான் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்படவோ, அதபற்றி அவர் எந்த தகவலையும் வெளியிடவோ இல்லை என்றும், கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டது தொடர்பாகவே பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றும், அவருக்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எதுவும் தெரியாது என்றும், உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் உறவினர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமையவே, பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.