மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை உண்மையாகக் கையாள வேண்டும்
சிறிலங்காவுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை,அரசாங்கம் உண்மையாகக் கையாள வேண்டும் என்று முன்னாள் சபாநாயகரும், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜெயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின், ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மறுஆய்வுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல விடயங்களில் அரசாங்கம் நம்பகமான முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக நீண்டகாலமாக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் விமர்சிக்கப்படுகிறது.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஒரு குழு தற்போது சட்டத்தை மறுபரிசீலனை செய்து வருகிறது.
அதன் பரிந்துரைகள் தாமதமின்றி செயற்படுத்தப்பட வேண்டும்.
மேலும் பரந்தளவிலான அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பொது உரையாடல் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.
2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க, இணையவழி பாதுகாப்புச் சட்டம், ஊடகவியலாளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட சில முடிவுகள் சிறிலங்காவின் பிம்பத்தை மேலும் சேதப்படுத்தியுள்ளன.
இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்வதில் ஒருமித்த கருத்தும் வெளிப்படைத்தன்மையும் முக்கியம்.
மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை நேர்மையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
சர்வதேச விதிமுறைகளின்படி செயல்படுவது என்பது, தேசத்திற்கு துரோகம் செய்வதல்ல.
இது நீதி மற்றும் கண்ணியத்தை நோக்கிய ஒரு படியாகும் என்றும் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.