மகிந்தவைப் போலவே அநாதரவாக கைவிடப்படுகிறது மத்தள விமான நிலையம்
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட சிறிலங்காவின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தள மகிந்த ராஜபக்ச விமான நிலையம், கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்தள விமான நிலையத்துக்கு தற்போது சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமான நிறுவனமே பிரதானமான சேவையை மேற்கொண்டு வருகிறது.
பாங்கொக், சென்னை, திருச்சி, ரியாத், சங்காய், ஜெட்டா, மாலே உள்ளிட்ட நகரங்களுக்கு கட்டுநாயக்க வழியாக மத்தளவில் இருந்து விமான சேவைகளை நடத்தி வந்தது சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம்.
ஆனால், புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதையடுத்து, வரும் பெப்ரவரி 9ம் நாளுடன் மத்தள விமான நிலையத்துக்கான சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.
சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டத்தை குறைக்கும் நோக்கில், இலாபம் தராத இடங்களுக்கான சேவையை இடைநிறுத்த புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதனால், மத்தள மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தின் பெரும்பாலான அனைத்துலக விமான சேவைகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கன் எயர்லைன்ஸ் தவிர, மத்தள விமான நிலையத்துக்கு பிளை டுபாய் மற்றும் ரொட்டானா ஜெட் ஆகிய நிறுவனங்கள் முறையே டுபாய் மற்றும் அபுதாபிக்கான விமான சேவைகளை நடத்தி வருகின்றன.
முன்னை அரசாங்கத்தின் காலத்தில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையின் படி, மத்தள விமான நிலையத்தினால் மாதம் ஒன்றுக்கு 16 ஆயிரம் ரூபா வருமானம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.