மேலும்

அமெரிக்க போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப் பதவி விலகல்

stephan-j-rappபோர்க்குற்ற விசாரணைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதால், போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப், தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.

அடுத்த சில மாதங்களில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் தூதுவர் பதவியில் இருந்து தாம் நீங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிரிய அதிபர் பசீர் அல் ஆசாத்துக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்கும் விடயத்தில், அமெரிக்க அரச நிர்வாகம் அதிருப்தியளிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இது தமக்கு வெறுப்பளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு ஒபாமா நிர்வாகத்தினால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் ஸ்டீபன் ஜே ராப்.

ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர், ஸ்டீபன் ஜே ராப் உள்ளிட்ட அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள சிறிய தொகையிலான அதிகாரிகளே, மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதிலும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாவர்

ஸ்டீபன் ஜே ராப் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறப்புக் கவனம் செலுத்தி வந்தவர்.

இதற்காக அவர் சிறிலங்காவில் விசாரணைகளையும் மேற்கொண்டிருந்தார்.

போரின் இறுதி மாதங்களில் சிறிலங்காவில் அரசுப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய போர்க்குற்றங்கள் தொடர்பாக கொழும்பு விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்க முடியாது என்று ஸ்டீபன் ஜே ராப் முன்னர் கூறியிருந்தார்.

ஆனாலும், உயிரிழந்தவர்களின் உடல்களை தோண்டியெடுத்து, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்து காயங்களையேனும் ஆற்றும்படி அவர் சிறிலங்கா அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஸ்டீபன் ராப்பின் விலகல் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, மிச்சிக்கன் பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியரும், சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற கொடுமைகள் தொடர்பாக விசாரித்த ஐ.நா விசாரணைக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான ஸ்டீவென் ரத்னர், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஸ்டீபன் ராப் நெருக்கத்தை ஏற்படுத்தியவர் என்றும், பாரிய கொடுமைகளுக்கு எதிராக முன்னின்ற அமெரிக்க நிர்வாகத்தின் ஒரேயோரு வீரர் இவர் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றித் தாம் சேகரித்து வைத்திருந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள அமெரிக்கப் புலனாய்வுத்துறைக்கு அழுத்தங்களைக் கொடுப்பதில் ஸ்டீபன் ஜே ராப் சிறியளவில் வெற்றி கண்டிருந்தார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் சார்பாக, ராப்பில் பணியத்துக்கு தாம் சென்றதை ஸ்டீவென் ரத்னர் நினைவு கூர்ந்தார்.

ஐ.நாவின் இடைத்தரகின் ஏற்பாட்டில் சரணடையச் சென்ற போராளித் தளபதிகள்  சிறிலங்கா அதிகாரிகளால் திட்டமிட்டுப் படுகொலை செய்தது பற்றிய தகவல்களை கேட்டு ரத்னர் அங்கு சென்றிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக சில தகவல்களை அமெரிக்கத் தூதரகம் இடைமறித்துப் பெற்றுக் கொண்டிருந்ததாக ரத்னர் ஒரு வதந்தியைக் கேள்வியுற்றிருந்தார்.

அவற்றை எமக்குத் தருவதில் அவர்களுக்குத் தெளிவான தடைகள் இருந்தன. கடைசியில் அவர்கள் எமக்கு எதுவம் தரவில்லை என்றும் ரத்னர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *