இந்திய முப்படைகளின் துணைத் தளபதிகள் அருண ஜயசேகரவுடன் சந்திப்பு
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள உயர்மட்ட இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள், சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்திய விமானப்படையின் துணைத் தளபதி ஏர் மார்ஷல் அசுதோஷ் டிக்சிட், இந்தியக் கடற்படையின் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜய் கோச்சார், இந்திய இராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சந்தீப் ஜெயின் மற்றும் இந்திய தூதரக உயர்அதிகாரிகள் ஆகியோர் இந்தியக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகாலப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
பிராந்திய மற்றும் கடல்சார் பாதுகாப்பு, புதிதாகத் தோன்றும் பாதுகாப்புச் சவால்கள், பேரிடர் தயார்நிலை மற்றும் மீட்பு நடவடிக்கைகள், அத்துடன் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் குறித்தும், இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் இந்தியா வழங்கிய ஆதரவானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு, ஒற்றுமை மற்றும் நெருங்கிய உறவுகளை மேலும் பறைசாற்றுவதாக அமைந்திருந்தது என்று இந்திய பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

