மேலும்

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை ஒழிக்கும் சட்டம் நிறைவேறியது

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி (Chief of Defence Staff) பதவியை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி (ரத்து செய்தல்) சட்டமூலம்’ சிறிலங்கா  நாடாளுமன்றத்தில் நேற்றுமாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்  நேற்று முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அக்காலகட்டத்தில் நிலவிய தேவைகளுக்கு ஏற்ப, முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளைச் செயல்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘2009 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை’ ரத்து செய்யும் நோக்கில் இந்தச் சட்டம் முன்வைக்கப்பட்டது.

இந்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதன் மூலம், புதிய சட்டவாக்கத்தின் கீழ் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியும் ஒழிக்கப்படும்.

இந்தச்சட்டம் நடைமுறைக்கு வரும்போது, ​​பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையாச் சொத்துகளும் பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *