பாகிஸ்தானின் ஜேஎவ்-17 சி போர்விமானங்களை சிறிலங்கா நிராகரித்ததா?
JF-17C Block 3 ரகப் போர் விமானங்களை வழங்குவதற்கு, பாகிஸ்தான் முன்வந்த போது, சிறிலங்கா விமானப்படை அதனை நிராகரித்து விட்டதாக வெளியான தகவல்களை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மறுத்துள்ளது.
சிறிலங்கா விமானப்படையின் பழமையான கிபிர் மற்றும் F-7 ரகப் போர் விமானங்களுக்குப் பதிலாக, ஆறு முதல் பத்து JF-17C Block 3 ரகப் போர் விமானங்களை வழங்க பாகிஸ்தான் முன்வந்ததாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
பெயர் குறிப்பிடப்படாத வட்டாரங்களை மேற்கோள்காட்டிய அந்தச் செய்தியில், விமானங்களைப் பணியில் சேர்ப்பதற்கும் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் உதவுவதற்காக, பாகிஸ்தான் விமானப்படையின் பயிற்சிக் குழுவை அனுப்புவதற்கும் பாகிஸ்தான் முன்வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
JF-17 ரகப் போர் விமானத்தின் பிந்திய வகையை வாங்குவதில் சிறிலங்கா முன்னர் ஆர்வம் காட்டியதாகவும், ஆனால் அந்த முன்மொழிவு நிறைவேறவில்லை என்றும் இந்திய ஊடகம் குறிப்பிட்டிருந்தது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், இந்தக் கூற்றுகள் தவறானவை என்றும், விமானங்களை வாங்குவது தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிடமிருந்து எட்டு JF-17 ரகப் போர் விமானங்களை வாங்குவது குறித்து சிறிலங்கா பரிசீலித்து வருவதாக 2016-ஆம் ஆண்டில் வெளியான முந்தைய செய்திகளின் பின்னணியில் இந்த விவகாரம் எழுந்துள்ளது.
அந்தக் காலத்தில், உடன்பாடு கையெழுத்தாகும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த போதும், சிறிலங்கா விமானப்படை அதனை மறுத்திருந்தது.
சிறிலங்கா தற்போது கிபிர் மற்றும் F-7 ரக விமானங்கள் உள்ளிட்ட விமானங்களை மேம்படுத்தப்பட்ட திறன்களுடன் இயக்கி வருகிறது.
