அமெரிக்கப் படையினர் சிறிலங்காவை விட்டுப் புறப்பட்டனர்
டிட்வா புயலை அடுத்து பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக சிறிலங்கா வந்த அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த (INDOPACOM) படையினர் தங்கள் மனிதாபிமான உதவிப் பணியை முடித்துக் கொண்டு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
60 அமெரிக்கப் படையினரும் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து இன்று அமெரிக்க விமானப்படையின் C 130 விமானத்தில் புறப்பட்டனர்.
கடந்த 7ஆம் திகதி சிறிலங்கா வந்த அவர்கள் , பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதிலும் வழங்குவதிலும் உதவும் வகையில், சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து பணியாற்றியிருந்தனர்.
அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 விமானங்கள் கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மற்றும் இரத்மலானை விமானப்படைத் தளம் ஆகியவற்றில் இருந்து, யாழ்ப்பாணம், அனுராதபுரம், திருகோணமலை, அம்பாறை, மத்தல உள்ளிட்ட விமானப்படைத் தளங்களுக்கு உதவிப் பொருட்களை கொண்டு செல்வதில் ஈடுபட்டிருந்தன.

