மேலும்

சாரா ஜஸ்மின் மரணத்தை உறுதிப்படுத்த மீண்டும் மரபணுச் சோதனை?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களில் ஒருவரான சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி ராஜேந்திரன் உயிரிழந்து விட்டாரா என்பதை உறுதிப்படுத்த மற்றொரு மரபணுப் பரிசோதனை நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர்,  சாய்ந்துமருது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி ராஜேந்திரன் இல்லை என்பதை, முந்தைய இரண்டு மரபணுச் சோதனைகள் உறுதிப்படுத்தியிருந்தன.

இந்த நிலையில், மூன்றாவது மரபணுச் சோதனைக்காக உடல்களை தோண்டி எடுக்கப்பட்டதற்கான காரணம் உட்பட பல குறிப்பிட்ட விடயங்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர்  பிரசாத் ரணசிங்க ஆகியோரிடம், நீண்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

சாரா ஜஸ்மின் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து பாதுகாப்பு சபையில் எழுப்பப்பட்ட கேள்விகளை அடுத்து, அவரது நிலையைத் தீர்மானிக்க மேலும் விசாரணைகளை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் காவல்துறை மா அதிபர்  பிரசாத் ரணசிங்கவிடம் நேற்று முன்தினம் ஒரு விரிவான வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

உடல்களை தோண்டி எடுத்ததற்கான காரணங்கள், மூன்றாவது மரபணுச் சோதனை நடத்த எடுக்கப்பட்ட முடிவு மற்றும் பல முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது அவர் விளக்கமளித்துள்ளார்.

முந்தைய இரண்டு மரபணுச் சோதனைகள் சாரா ஜஸ்மின் இறக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய போதிலும், மூன்றாவது  மரபணுச் சோதனையின் முடிவு – அவர் இறந்துவிட்டார் என்று கூறியது, தொடர்பாகவே இப்போது ஆராயப்பட்டு வருகிறது.

இந்த முரண்பாடு குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணையை நடத்தி வருகிறது.

இதனால், நான்காவது மரபணுச்  சோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாரா ஜஸ்மின் இறக்கவில்லை என்பதைக் குறிக்கும் இரண்டு மரபணுச் சோதனை அறிக்கைகள் தற்போது உள்ளன. அதே நேரத்தில் முந்தைய கண்டுபிடிப்புகளுக்கு சவால் விடும் மூன்றாவது அறிக்கை – அவர் இறந்துவிட்டதாகக் கூறுகிறது.

நடந்து வரும் விசாரணைகளில் இருந்து வெளிவரும் தகவல்கள் மூன்றாவது அறிக்கையின் செல்லுபடியாகும் தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *