மேலும்

சிறிலங்காவின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல  சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சபுகஸ்கந்த – தெனிமுல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் வண்டி, 25 வயதுடைய பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற மகிழுந்துடன் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மகிழுந்தில் இருந்த பெண், அவரது ஆறு மாதக் குழந்தை, 55 வயதுடைய பெண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவும் காயமடைந்து கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இரண்டு ஓட்டுநர்களும் மதுபோதையில் இருந்தனரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனைகளுக்காக சிறிலங்கா காவல்துறையினர் காத்திருப்பதாக காவல்துறை பேச்சாளர் இன்று காலை கூறியிருந்தார்.

இந்த நிலையில், அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அவர் மதுபோதையில் இருந்தார் என சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறு என அரசாங்க ஊடகமான தினமின செய்தி வெளியிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்த போது சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அசோக ரன்வல, ஜப்பானில் கலாநிதி பட்டம் பெற்றதாக பொய்யான தகவலை வழங்கியிருந்தார்.

அதனை நிரூபிக்குமாறு சவால் விடுக்கப்பட்ட போது, அதனை செய்யாமல் அவர் பதவி விலகியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *