சிறிதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை ஆரம்பம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், முந்தைய அரசாங்கத்தின் மூலம் மதுபான உரிமங்களைப் பெற்று, ஆடம்பர பல்பொருள் அங்காடிகளை தொடங்கியதாக, சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியதாக சிவில் சமூக ஆர்வலர் சஞ்சய மஹாவத்த என்பவர், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பாக, ஆணைக்குழுவினால் சஞ்சய மஹாவத்தவிடம், சுமார் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான தகவல்களை அவர் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளார்.
மதுபான உரிமம் அவரது மகன் சாரங்கன் மூலம் கண்டாவளை பிரதேச செயலக அலுவலகத்தில் பணம் செலுத்தி பெறப்பட்டதாகவும், அவருக்கு காங்கேசன்துறையிலும், கிளிநொச்சி பிரதேச சபைக்கு முன்பாகவும், இரண்டு ஆடம்பர பல்பொருள் அங்காடிகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பல்பொருள் அங்காடிகள் சிறிதரனின் மருமகள் (சகோதரியின் மகள்) மற்றும் அவரது சகோதரர் மூலம் இயக்கப்படுவதாக வம் குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் அவரது உறவினர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துடன், இதனை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார் என்றும் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
