திருவனந்தபுரத்தில் கூட்டு கட்டளைப்பீடத்தை அமைக்கிறது இந்தியா
சிறிலங்கா மற்றும் மாலைதீவில் சீனாவின் தலையீடுகள் பற்றிய கவலைகளை அடுத்து, திருவனந்தபுரத்தில், இந்தியா கூட்டுப் படைக் கட்டளைத் தலைமையகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரத்தில் இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை ஒருங்கிணைத்து – கூட்டுப்படைக் கட்டளையகத்தை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, ஒருங்கிணைந்த அரங்கு கட்டளைத் தலைமையகம் அக்குளத்தில் (Akkulam) உள்ளது.
கடலில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதே இந்த கட்டளை அமைப்பு உருவாக்கப்படுவதன் நோக்கமாகும்.
டிசம்பர் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடற்படை நாள் கொண்டாட்டங்களுக்காக, திருவனந்தபுரம் வரும்போது கூட்டுப்படை கட்டளையகம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
கூட்டுப் படைக் கட்டளையகத்தின் வருகையுடன், திருவனந்தபுரம் இந்தியாவின் ஒரு முக்கிய பாதுகாப்பு மையமாக மாறும்.
விழிஞ்சம் துறைமுகம் மற்றும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு அருகாமையில் இருப்பதால், திருவனந்தபுரத்தில் தலைமைப்பீடத்தை அமைக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் சர்வதேச கப்பல் பாதையிலிருந்து 10 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது.
சிறிலங்கா மற்றும் மாலைதீவில் சீனாவின் கவலையளிக்கும் தலையீடுகள் திருவனந்தபுரத்தில் கட்டளைப் பீடத்தை நிறுவ வழிவகுத்துள்ளது.
கொல்கத்தாவில் நடந்த கூட்டுத் தளபதிகள் கூட்டத்தில் திருவனந்தபுரத்தில் ஒரு கூட்டு கட்டளையகத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.
