சைபர் குற்றத்திற்கு எதிரான ஐ.நா பிரகடனத்தில் சிறிலங்கா கைச்சாத்து
வியட்நாமின் ஹனோய் நகரில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க சைபர் குற்றத்திற்கு எதிரான ஐ.நா மாநாட்டில் (UNCC) சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு, நீதி அமைச்சுடன் இணைந்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சு சமர்ப்பித்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்த, இந்த பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளது.
ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் வியட்நாமின் தலைவர் லுவாங் குவோங் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வில், 72 ஐ.நா. உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டன.
இந்த நிகழ்வில் 111 உறுப்பு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளரும் சிறிலங்கா குழுவின் தலைவருமான வருண சிறி தனபால இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் மட்டுமே இந்தப் பிரகடனத்தில் இணைந்துள்ள தெற்காசிய நாடுகள் ஆகும்.
