இன்று சிறிலங்கா வருகிறார் வத்திக்கான் வெளியுறவு அமைச்சர்
நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான வத்திக்கானின் செயலர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், சிறிலங்காவிற்குப் பயணம் இன்று மேற்கொள்கிறார்.
அவர் நவம்பர் 8ஆம் திகதி வரை சிறிலங்காவில் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரில், அவர், சிறிலங்காவுக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
அவர் இந்தப் பயணத்தின் போது, அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திப்பார்.
அத்துடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துவார்.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள கலாசார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் வத்திக்கானின் வெளியுறவு அமைச்சர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
