உள்ளூராட்சி தலைவர்களின் பாதுகாப்புக்கு காவல்துறை சிறப்புத் திட்டம்
உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களின் பாதுகாப்பிற்காக ஒரு சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்துவதற்கு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் திட்டமிட்டுள்ளார்.
முதல் கட்டமாக, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களின் பட்டியல் புலனாய்வுப் பிரிவுகளிடமிருந்து பெறப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாதாள உலகத்திடமிருந்து அல்லது வேறு ஏதேனும் குழுவிலிருந்து ஏதேனும் மரண அச்சுறுத்தல்கள் அல்லது பிற அச்சுறுத்தல்கள் வந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறும் காவல்துறையினர், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களுக்குத் தெரிவித்துள்ளன.
அதேவேளை, கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த 20 அரசியல்வாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவர்களில் உள்ளூராட்சி சபைகளின் மூன்று தலைவர்களும் அடங்குவர்.
இந்தக் காலகட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் பல உறுப்பினர்களும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைகளில் பெரும்பாலானவற்றிற்கு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்களே காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வெலிகம பிரதேச சபை தலைவரின் படுகொலையை அடுத்து அரசியல்வாதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த தவறியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
