விரைவில் கொழும்பு வருகிறார் சீன வர்த்தக அமைச்சர்
சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டோ (Wang Wentao) விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் வரி அறிவிப்புகளை அடுத்து, அதன் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கின்ற முயற்சிகளில் சிறிலங்கா ஈடுபட்டுள்ள நிலையில், வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் சீன வர்த்தக அமைச்சர் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அண்மையில் வர்த்தக அமைச்சில் நடந்த கூட்டத்தில், சீன அதிகாரிகள் இந்தப் பயணம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.
சிறிலங்கா தனது ஏற்றுமதி சந்தைகளை விரிவுபடுத்த முயற்சிக்கும் சூழலில், சீன வர்த்தக அமைச்சர் ஜூன் மாதம் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும், இந்த பயணத் திட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் இன்னும் தயாரிக்கப்படவில்லை.
சீனாவும் சிறிலங்காவும், 10 ஆண்டுகளுக்கு முன்னர், சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய போதும், தற்போது அந்தப் பேச்சுக்கள் முடங்கியுள்ளன.
ஆறு சுற்று பேச்சுக்களுக்குப் பின்னர், 2018 ஆம் ஆண்டில் இந்தக் கலந்துரையாடல்கள் நிறுத்தப்பட்டன.
சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீனப் பயணத்தை தொடர்ந்து, இந்தப் பேச்சுக்கள் மீளத் தொடங்கப்படுவதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில் சிறிலங்காவில் இருந்து சீனாவுக்கான மொத்த ஏற்றுமதி 251.91 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், சீனாவிலிருந்து சிறிலங்காவுக்கான மொத்த இறக்குமதிகள் 4,332.48 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்தன.
இந்த வர்த்தக இடைவெளியைக் குறைத்து, சிறிலங்காவின் பொருட்களை அதிகளவில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்தும் ஆராயப்படவுள்ளது.