இன்று ஆய்வுகளை தொடங்குகிறது ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழு
ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழு இன்று முதல் சிறிலங்காவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
சிறிலங்கா ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்காக, 27 சர்வதேச பிரகடனங்களை நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா, அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காகவே, ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு சிறிலங்கா வந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதிகளை மேற்கொண்டதன் மூலம் சிறிலங்காவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் விளங்குகின்றது.
இந்த சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையே உதவியாக அமைந்தது.
எனினும், மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு , காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சி ஆகிய விடயங்களில் 27 சர்வதேச பிரகடனங்களை நிறைவேற்றுவதாகவும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாகவும் வாக்குறுதி அளித்தே சிறிலங்கா அரசாங்கம், இந்தச் சலுகையை பெற்றுக் கொண்டது.
இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதை, ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்காணித்து வருகிறது.
கொழும்பு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு, சிறிலங்கா அரச அதிகாரிகள், தொடர்புடைய நிறுவனங்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூகம், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதுடன், களப் பயணங்களையும் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.