மேலும்

அமெரிக்காவுடன் தொடர்ந்து பேசவே இணக்கம்- வரிக்குறைப்பு தீர்மானம் இல்லை

அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களில் இதுவரை எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

வொஷிங்டன் சென்ற சிறிலங்கா குழுவின் பேச்சுக்கள் வெற்றியளித்திருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

விரைவில் இதுபற்றிய கூட்டறிக்கை வெளியாகும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தில், சிறிலங்கா தூதுக்குழு ஒன்று, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதுவர் ஜேமிசன் கிரீரை  ஏப்ரல் 22 ஆம் திகதி சந்தித்தது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், சிறிலங்கா தூதுக்குழு, அரசாங்கத்தின் சார்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதர் கிரீருடன் உரையாடிய தகவல் தொடர்புகளின் மூலங்களை ஒப்படைத்தது.

கடந்த காலங்களில் சிறிலங்கா எதிர்கொண்ட சவால்கள் மற்றும் எதிர்கால சவால்களை சமாளிக்கவும், முழுமையான பொருளாதார மீட்சியை நோக்கி நகரவும், சிறிலங்கா அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, தூதுவர்  கிரீருக்கு சிறிலங்கா குழு விளக்கமளித்தது.

வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதிலும், வரி மற்றும் வரி அல்லாத தடைகளைக் குறைப்பதிலும், அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற, சிறிலங்கா அரசாங்கத்தின் உடனடி மற்றும் நேர்மறையான உறுதிப்பாட்டை சிறிலங்கா தூதுக்குழு எடுத்துரைத்தது.

பேச்சுக்களைத் தொடங்குவதற்காக, சிறிலங்கா செய்துள்ள முன்மொழிவுகளை தூதுவர் கிரீர் பாராட்டினார்.

நியாயமான மற்றும் சமமான வர்த்தக உறவுகளை உறுதி செய்வதற்காக, இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

அன்றைய தினம், சிறிலங்கா பிரதிநிதிகள், அமெரிக்காவிற்கு சிறிலங்கா எழுத்துப்பூர்வமாக வழங்கிய சலுகை குறித்து, மேலும் கலந்துரையாடுவதற்காக,  தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்குப் பொறுப்பான பிரெண்டன் லின்ச் தலைமையிலான தூதுவர் கிரீர் நியமித்த பிரதிநிதிகள் குழுவை சந்தித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நோக்கத்துடன், பேச்சுவார்த்தைகளைத் தொடர, இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

ஒப்பந்தத்தை மிகக் குறுகிய காலத்தில் இறுதி செய்யும் விருப்பத்தை இரு தரப்பினரும் தெரிவித்தனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பரஸ்பர வரிகளை குறைப்பது அல்லது நீக்குவது தொடர்பான எந்த இணக்கப்பாடும் எட்டப்பட்டது பற்றிய தகவல்கள் இடம்பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *