நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நீக்குவதற்கு என்பிபி அரசாங்கம் பின்னடிப்பு
நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான தனிநபர் பிரேரணைக்கு சிறிலங்காவின் ஆளும்கட்சி ஆதரவு வழங்க பின்னடித்து வருகிறது.
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்துடன், அரசாங்கம் உடன்படவில்லை என்றாலும், புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அதனை ரத்து செய்வதற்காக அறிமுகப்படுத்தியுள்ள தனிநபர் பிரேரணை நல்லெண்ணத்துடன் கொண்டு வரப்படவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவர்கள் அவ்வப்போது பிரபலமடைய பல்வேறு விடயங்களைச் செய்கிறார்கள்.
அவரும் அவரது கட்சியும் பல தசாப்தங்களாக நாடாளுமன்றத்தில் உள்ளனர். ஆனால் கடந்த காலத்தில் அவர்கள் முற்போக்கான எதையும் செய்யவில்லை.
அரசாங்கம் நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்துடன் உடன்படவில்லை.
அதில் தேவையான மாற்றங்களைச் செய்யும் பொறுப்பு, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் அதைத் திருத்துவோம் என்று கூறினோம். நீதி அமைச்சர் அதற்காக பணியாற்றி வருகிறார்,” என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.
தனிநபர் பிரேரணையை ஆதரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால,
“நாங்கள் இன்னும் பிரேரணையைப் பார்க்கவில்லை. அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் மட்டுமே அதற்கு பதிலளிக்க முடியும். என்றும் குறிப்பிட்டுள்ளார்.