மேலும்

ஊடகங்களுக்கு எதிராக துப்பாக்கிகளுக்குப் பதிலாக இப்போது வாள்கள்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரும், ஊடகப் பணியாளருமான ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலைக் கண்டித்து நேற்று யாழ். நகரில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.

காலைக்கதிர் நாளிதழின்  ஊடகவியலாளரும், அந்த நாளிதழின் விநியோகிப்பாளருமான, இராஜேந்திரன், கடந்த திங்கட்கிழமை அதிகாலை நாளிதழ்களை விநியோகப் பணிக்காக சென்று கொண்டிருந்த போது, கொழும்புத்துறை, துண்டி பகுதியில் அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட குழுவினரால் தாக்கப்பட்டார்.

வாளால் வெட்டப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலைக் கண்டித்து, யாழ். நகர பேருந்து நிலையம் முன்பாக நேற்றுக்காலை ஊடகவியலாளர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள், பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

துப்பாக்கிகளுக்குப் பதிலாக இப்போது வாள்களால் ஊட்டகவியலாளர்கள் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளதாகவும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்குவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து வெளியிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *