மேலும்

தமிழர் நிலங்களை அபகரிக்க வட்டமடிக்கும் ‘கழுகுகள்’ – முதலமைச்சர் சூசகம்

தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களையும், வளம்மிக்க நிலப்பரப்புகளையும் அபகரிப்பதற்கு, கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

கிளிநொச்சியில், நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

“தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களையும் வளம் மிக்க நிலப்பரப்புகளையும் அபகரிப்பதற்கு,  கழுகுகள் எம்மைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.

நாமோ எதையும் உணராதவர்களாக – வாளா மடந்தைகளாக சிறு சிறு மகிழ்ச்சிக் கேளிக்கைகளில் மூழ்கி இருக்கின்றோம்.

வன்னிப் பிராந்தியத்தில், தமிழர்களின் குடியிருப்புகள் கேள்விக் குறியாக்கப்படுவதற்கான முத்தாய்ப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு எனும் தலைப்பின் கீழ் இரகசியமாகவும், தூர நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டு வருவதை எம்மால் உணரக்கூடியதாக உள்ளது.

ஆனால் அதனை எந்த அளவுக்கு எம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பது கேள்விக் குறியாக உள்ளது.

இந்த இரகசிய நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் எம்மால் முடிந்த வரையில் அல்லும் பகலும் முயன்று வருகின்றோம்.

எமது முயற்சிகளுக்கு அவ்வப் பகுதிகளில் உள்ள மக்களின் உதவி ஒத்தாசைகள் அவசியம் தேவைப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *