மேலும்

நம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும் – கனேடியப் பிரதமர்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் கனேடியப் பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடே.

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இன்று சிறிலங்காவில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட ஒன்பதாவது ஆண்டு நிறைவை கடைப்பிடிக்கிறோம். 26 ஆண்டுகளாக நீடித்த போரினால், அளவிடமுடியாத காயங்கள், வாழ்க்கை இழப்புகள், இடம்பெயர்வுகளை சந்திக்க நேரிட்டது.

போரில் உயிர் பிழைத்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் நிலை பற்றிய பதிலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், போரினால் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்ட பல தமிழ் கனேடியர்களை நான் சந்தித்திருக்கிறேன்.

அவர்களின் கதைகள், நீடித்த சமாதானத்தையும் உண்மையான நல்லிணக்கத்தையும் அடைவதற்கான தேவையை நினைவூட்டுகின்றன.

உயிர்தப்பியோருக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் நான் அழைப்பு விடுகிறேன்.

நல்லிணக்கம், மீள நிகழாமையை உறுதிப்படுத்தல், அமைதி, மற்றும் நீதியை நோக்கிய நகர்வுகளுக்கான பணிகளை உறுதிப்படுத்துவதற்கும், பொறுப்புக்கூறல், நிலைமாறு கால நீதி, தண்டனையில் இருந்து தப்பிப்பதை முடிவுக்குக் கொண்டு வரும், உள்நாட்டு  மற்றும் அனைத்துலக கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கனடா முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

இந்த நினைவு நாளில், தமிழ் கனேடியர்களுக்கும், ஆயுதப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன், எமது நாட்டிற்கு, முக்கியமான பங்களிப்பை வழங்கிய தமிழர்-கனேடியர்களை அங்கீகரிப்பதற்கும், அவர்கள் கடந்து வந்த துன்பங்களை நினைவு கொள்வதிலும், இணைந்து கொள்ளுமாறு அனைத்து கனேடியர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்”  என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *