மேலும்

இரணைதீவில் மீளக்குடியமர அனுமதி – 8 ஏக்கர் காணிகளை விடுவிக்க கடற்படை மறுப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில், 8 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க மறுப்புத் தெரிவித்துள்ள சிறிலங்கா கடற்படை, ஏனைய பகுதிகளில் பொதுமக்கள் மீளக் குடியமர அனுமதி அளித்துள்ளது.

1992ஆம் ஆண்டு இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்து, முழங்காவில் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள், தம்மை மீளக்குடியமர அனுமதிக்கக் கோரி ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வந்தனர்.

எனினும் சிறிலங்கா அரசதரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில், கடந்தவாரம், இரணைதீவுக்குச் சென்று, அங்குள்ள தேவாலயத்தில் தங்கியிருந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

அத்துடன், தமது காணிகளைத் துப்புரவு செய்து தாமாகவே மீளக்குடியேறும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

சுயமாக மீளக்குடியேறிய மக்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் வடக்கு மாகாணசபை தரப்பில் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று இரணைதீவுக்குச் சென்ற சிறிலங்காவின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் ராஜபக்ச, மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் சுரேஸ் உள்ளிட்ட அதிகாரிகளும், மாவட்டச் செயலக அதிகாரிகளும், அங்கு தங்கியுள்ள மக்களுடன் பேச்சு நடத்தினர்.

இதன்போதே, காணிகள் அடையாளம் காணப்பட்ட 190 குடும்பங்களை இரணைதீவில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடத்தல்கள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படை 8 ஏக்கர் காணிகளில் தொடர்ந்தும் நிலை கொண்டிருக்கும் என்றும், ஏனைய பகுதிகளில் மக்கள் மீளக் குடியமரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீளக் குடியேறும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் அரச அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *