மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – முதலமைச்சர்- மாணவர் ஒன்றியம் இழுபறி

எதிர்வரும் 18ஆம் நாள், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பாக, வடக்கு மாகாணசபையும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், விடாப்பிடியான நிலைப்பாடுகளில் இருப்பதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தாமே இம்முறை ஒழுங்குபடுத்தி நடத்தப் போவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்திருந்தது.

எனினும், கடந்த மூன்று ஆண்டுகளாக நி்னைவேந்தல் நிகழ்வை ஒழுங்குபடுத்தி  நடத்தி வரும் வடக்கு மாகாணசபை, இம்முறையும் தாமே நிகழ்வை நடத்தப் போவதாகவும், இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தம்முடன் இணைந்து கொள்ளுமாறும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்  தொடர்பான  கலந்துரையாடலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொள்ளாமை மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

“பல்கலைக்கழக மாணவர்கள் எமக்கெதிரானவர்கள் அல்ல. ஆனால், தவறான பல கருத்துக்களால் மாணவர்கள் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளை நினைவுகூருவதற்கான எண்ணம் மாணவர்கள் மத்தியில் இருந்திருந்தால், ஓரிரு மாதங்களுக்கு முன்னர் எம்முடன் கலந்தாலேசித்திருக்கலாம்.

அவ்வாறு செய்யாமல், நாங்கள் தான் நிகழ்வை செய்யப்போகின்றோம் எங்களுடன் நீங்கள் கலந்கொள்ளுங்கள் என்று கேட்பது வருத்தப்பட வேண்டிய ஒரு செயல்.

ஒவ்வொருவரும் நாங்கள் செய்கின்றோம் எங்களுடன் கலந்து கொள்ளுங்கள் என்று கேட்டால் அவ்வாறு நாங்கள் செய்ய முடியாது. அதிகாரபூர்வமாக  ஒன்றைத் தான் செய்ய முடியும்.

கடந்த 3 ஆண்டுகளாக செய்து வருகிறோம். அதன் காணி எமது அமைச்சின் கீழ் வருகிறது. வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதனால், மக்களின் பிரதிநிதித்துவத்தைக் கொடுக்க வேண்டிய உரித்து எமக்கு உள்ளது.

அதிகாரபூர்வமாக எமது கடமைகளைச் செய்து வருகின்றோம். இதில் மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் எம்முடன் முற்கூட்டியே கலந்தாலோசித்து செயற்படுத்தியிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல், எமது கலந்துரையாடலிலும் கலந்துகொள்ளாமல் இருந்தமை மனவருத்தத்தைத் தருகின்றது.

தனியாக செய்யாமல் அனைவரும் இணைந்து செய்வது உசிதம்.

பல்கலைக்கழக மாணவர்கள் எமக்கு எதிரானவர்களும் அல்ல. நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்களும் அல்ல. எம்முடன் இணைந்து நினைவுநாள்  நிகழ்வில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அவற்றை நடைமுறைப்படுத்த உதவி புரிய வேண்டும்.

எம்முடன் இணைந்து நினைவுகூரல் நிகழவை முன்னெடுக்க வேண்டும்,” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தரப்பில் இருந்து இதற்கு எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *