மேலும்

அனைத்துலக அரங்கிற்கு விரிவடையும் மைத்திரி – ரணில் பனிப்போர் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

maithri-john-kerryஅமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி மற்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்பில் என்ன நடந்தது என்பதை அறிவது ஆர்வத்தைத் தூண்டியது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்காவின் உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் ஜோன் கெரிக்கு தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இந்தத் தகவலை வாசித்த கெரி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அரசாங்கத்திற்கும் இடையிலான தற்போதைய நிலவரம் தொடர்பாக மைத்திரியிடம் வினவினார். ஜோன் கெரிக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில் சிறிலங்காவின் தேசிய அரசாங்கம் தொடர்பாக வினவுமாறு நிஷா பிஸ்வால் கேட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் மைத்திரி சந்தேகம் கொண்டிருந்தால் அது நியாயமானது.

எனினும், நிஷா பிஸ்வாலின் செய்திக்குறிப்புத் தொடர்பாக மங்களவும் ரணிலுமே உண்மையில் மகிழ்ச்சியடைந்தனர்.  மைத்திரிபாலவுடன் அமெரிக்காவிற்குப் பயணம் செய்திருந்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக ரணில் குழப்பமடைந்திருந்தமையே இதற்கான காரணமாகும்.

தனக்கோ அல்லது தனது உதவியாளருக்கோ அறிவிக்காமல் தனது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிற்குச் சென்றமை தொடர்பில் ரணில் சந்தேகம் கொண்டிருந்தார். ஏனெனில் மகிந்தவைப் பயன்படுத்தி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு ரணில் முயற்சிப்பதாக இவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டே ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களை மைத்திரிபால தனது அமெரிக்காவிற்கான பயணத்தின் போது தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார் என ரணில் நம்பமுடியும்.

எனினும், மைத்திரியுடன் அமெரிக்காவிற்குப் பயணம் செய்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ரணில் தரப்பு விசாரணை செய்யும் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை. இந்தச் செய்தியானது மைத்திரிக்கு எதிரான ஒன்றாகும்.

maithri-john-kerry

ரணிலிடம் அறிவிக்காது ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியுயோர்க்கிற்குப் பயணம் செய்திருந்தால், இந்தப் பிரச்சினை தொடர்பாக ரணில் மற்றும் மைத்திரிக்கு இடையில் கலந்துரையாடப்பட்டு தீர்வு காணப்பட்டிருக்கும். எனினும், இந்த விடயத்தை ஊடகங்களின் மூலம் வெளியிடுவதன் மூலம் இந்த நாடு மட்டுமல்லாது அனைத்துலக நாடுகள் மத்தியிலும் மைத்திரி மற்றும் ரணில் ஆகிய இரு தலைவர்களுக்கும் இடையில் பாரியதொரு முரண்பாடு உள்ளது என்கின்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தேசிய அரசாங்கத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாகவே ஜோன் கெரி வினவியிருந்தாரா அல்லது இல்லையா என்பது எமக்குத் தெரியாது. எனினும் இந்தச் செய்திக்குறிப்பானது நிஷா பிஸ்வாலால் அனுப்பப்பட்டமையே இங்கு முக்கிய விடயமாகும். இவர் அமைச்சர் மங்கள சமரவீரவின் நண்பியாவார்.

மங்களவின் வெளிவிவகார அமைச்சுடன் ரணில் முன்னர் முரண்பாட்டைக் கொண்டிருந்த போதிலும் பின்னர் அவர் அதனை மறந்துவிட்டார். வெளிவிவகாரக் கொள்கையானது மங்களவின் வெளிவிவகார அமைச்சால் சரியான வகையில் அமுல்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய ரணில் புதிதாக ஆணைக்குழுக்களை நியமித்திருந்தார். இது மட்டுமல்லாது, இந்த விடயம் தொடர்பாக ரணில், மைத்திரியுடனும் கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில் வெளிவிவாகார அமைச்சில் தலையீடு செய்வதை ரணில் திடீரென நிறுத்தியமைக்கான காரணம் எமக்குத் தெரியாது. ஏனெனில் மங்கள, ரணிலின் கருத்தை அனைத்துலக சமூகத்திற்கு எடுத்துச் சென்றிருந்தமையாக இருக்கலாம்.

பனிப்போர்:

அனைத்துலக சமூகத்தின் மனதை வென்றெடுப்பதற்காக மைத்திரி மற்றும் ரணில் ஆகியோருக்கு இடையில் பனிப்போர் ஒன்று ஆரம்பித்துள்ளமை தெளிவாகிறது. இந்தப் பனிப்போரில் ரணிலிற்கு ஆதரவாகவே மங்கள செயற்படுவதாக மைத்திரி தரப்புக் கருதுகிறது. இதன்காரணமாக போர்க் குற்றங்கள் தொடர்பாக மங்களவால் கூறப்படும் கருத்துக்களை மைத்திரி தரப்பு மறுத்து வருகிறது.

இதில் முதலாவது விடயம் மைத்திரியும் அவரது  தரப்பினரும் மகிந்த மற்றும் ராஜபக்ச குடும்பத்தை அரசியலிலிருந்து ஒதுங்கச் செய்வதற்கு முயற்சிக்கின்றனர். போர்க்குற்றங்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரலானது அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளில் ஒரு தடையாக இருப்பதாக இவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இந்த விடயம் சிங்கள பௌத்த மக்களை மகிந்தவிற்குப் பின்னால் அணிதிரள வைக்கும் என மைத்திரி தரப்புக் கருதுகிறது. ஆகவே, சிங்கள பௌத்த மக்களால் போர்க் குற்றங்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் எவ்வாறு நோக்கப்படுகிறது என்பதற்கமைவாக அதனை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலகத் தமிழ் பேரவை போன்ற புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் மங்கள மிகவும் நெருக்கமான தொடர்பைப் பேணி வருகிறார் என்பது வெளிப்படை. இதற்கு ரணில் எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை. ஏனெனில் இதன்மூலம் அடுத்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கை ஐ.தே.க வெல்வதற்கான சாத்தியம் உள்ளதாக ரணில் கருதுகிறார்.

அனைத்துலக சமூகத்தின் இதயத்தை வெல்வதற்காக ரணில் மற்றும் மைத்திரிக்கு இடையில் இடம்பெறும் பனிப்போரானது அடுத்த பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை வெல்வதற்கான ஒரு முயற்சியாக உள்ளது.

புலம்பெயர் தமிழ்மக்களின் மனங்களை வெல்வதன்மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை ஐ.தே.க வசம் பெற்றுக்கொள்ளலாம் என ரணிலிடம் மங்கள நம்பிக்கை தெரிவித்திருக்கலாம். இதன்காரணமாக போர்க்குற்றங்கள் தொடர்பில் மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலிற்கு அமைவாகவே பணியாற்ற வேண்டும் என ரணிலிடம் மங்கள எடுத்துக்கூறுவதற்கான சாத்தியம் உள்ளது.

எனினும், ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் அரசியலில் தலைதூக்கக் கூடாது என்ற மைத்திரியின் அரசியற் திட்டமானது மங்களவின் நிகழ்ச்சி நிரல் மூலம் அழிவடையலாம் என மைத்திரி அச்சமடைவதாகவும் நோக்கலாம்.

வழிமூலம்       – சிலோன் ருடே
ஆங்கிலத்தில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ
மொழியாக்கம்- நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *