மேலும்

சிறிலங்கா அரசியலில் புதிதாக உருவாகவுள்ளது தேசிய இராணுவக் கட்சி

major-ajith-prasannaஎதிர்வரும் தேர்தல்களில் தேசிய இராணுவ கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை உருவாக்கி போட்டியிடவுள்ளதாக, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன  தெரிவித்தார்.

தாய் நாட்டுக்காக இராணுவத்தினர் அமைப்பு கொழும்பில் நேற்றுமுன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் இராணுவத்தினரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுத்ததில்லை.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இராணுவத்தை பாதுகாப்பதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து நடடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் கூறியே இந்த அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தன.

தற்போதைய அரசாங்கத்தில் இராணுவத்தினர் சிறையிலடைக்கப்படுகின்றனர்.  அண்மையிலும் மன்னாரில் இராணுவத்தினர்  சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  அதேபோன்று பிரகீத் எக்னெலிகொட வழக்கில் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த 9 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த அரசாங்க காலத்தில் அமைச்சராக இருந்த மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா,  இராணுவ  அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார். இன்று இராணுவத்தினருக்காக கூக்குரல் இடும் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, பந்துல குணவர்த்தன போன்றவர்கள் அப்போது வாய்திறக்கவில்லை.

நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரைப் பிணையில் எடுப்பதற்காக பந்துல குணவர்த்தன 20 இலட்சம் ரூபா நிதி சேகரித்துள்ளார். அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள்  சிறையில் இருக்கும்போது இவர்கள் நலன் விசாரிப்பதற்கு கூட செல்லவில்லை. அவர்களில் 4பேர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்படும்போது கூட்டு எதிரணியை சேர்ந்த ஒருவர் மாத்திரமே நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.

ஆனால் நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்படும்போது கூட்டு எதிரணியினர் பெருமளவு மக்களை ஒன்றிணைத்துக்கொண்டு நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர்.

கூட்டு எதிரணியில் இருக்கும் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில போன்றவர்கள் இராணுவத்தினர் தொடர்பாக மேடைகளில் பேசுவதெல்லாம் அவர்களின் சுய அரசியல் நோக்கத்திற்காவே அன்றி இராணுவத்தினர்    மீது கொண்ட மரியாதைக்கல்ல.

எனவே இராணுவத்தினரின் நலனுக்காகவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தேசிய இராணுவ கட்சி என்ற பெயரில் கட்சியை அமைத்து இராணுவ குடும்பத்தினரை இணைத்துக் கொள்ளவுள்ளோம்.

இந்த கட்சியை அமைக்கவிடாமல் கூட்டு எதிரணி என்னை தடுத்து வருகிறது. அதற்காக நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *