மேலும்

மன்னாரில் 1400 ஆண்டுகளுக்கு முந்திய குடியிருப்புத் தொகுதி – தொல்பொருள் ஆய்வில் கண்டுபிடிப்பு

mannar-archeological-site-1மன்னார் – கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் நடத்தப்படும், அகழ்வாராய்ச்சியில், 1400 ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் வசித்ததை உறுதிப்படுத்தும் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பிரிவு மாணவர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியிலேயே இந்த தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

“இரண்டு விதமான குடியிருப்புக்கள் இருந்தமைக்குரிய சான்றுகள் காணப்படுகின்றன. ஒன்று கி.பி 4 ஆம் நூற்றாண்டுக்கு முன் இருந்திருக்கிறது. இதற்கான தொன்மைச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

இது பெரும்பாலும் குளத்துக்கு உள்ளேயும், நாங்கள் ஆய்வு செய்த இடத்திற்கு அப்பாலும் இந்தச் சான்றுகளுக்கான அடையாளப் பொருட்கள் காணப்படுகின்றன.

கட்டுக்கரை குளத்தின் அருகே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ஐயனார் வழிபாடு செய்யப்பட்ட இடம் அல்லது ஐயனார் கோவில் ஒன்று அமைந்திருந்தமைக்கான அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன.

mannar-archeological-site-1mannar-archeological-site-2mannar-archeological-site-3

இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள யானைகள், காளைகள் போன்றவற்றிற்குக் கட்டுகின்ற மணிகள் இலங்கையின் எந்தப் பாகத்திலும் காணப்படாதவைகளாக இருக்கின்றன.

ஐயனார் வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ள மதுரையில்கூட இந்த வகையான மணிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. அந்த வகையில் இந்தப் பிரதேசம் தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்ந்திருப்பது தெரியவந்திருக்கிறது’ என்று பேராசிரியர் புஸ்பரட்ணம் குறிப்பிட்டார்

மூன்று மீட்டர் நீள, அகலம் கொண்ட மூன்று குழிகள் அகழ்ந்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வின் மூலம் புதிய வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள மாதோட்டம் துறைமுகத்தில் இருந்து, அனுராதபுர புராதன இராசதானிக்கு அமைக்கப்பட்டிருந்த வீதியோரத்தில் இந்தக் குடியிருப்புக்கள் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *