மேலும்

சிறிலங்கா – இன்னமும் எண்ணப்படும் காயங்கள்

lanka-ealam-art-war-memorial- (1)சிறிலங்காவின் வடக்கில் உள்ள கிளிநொச்சிக்கு மேற்குப் புறமாக அமைந்துள்ள உருத்திரபுரம் என்கின்ற கிராமத்தில் அரைவாசி கட்டப்பட்ட மூன்று அறைகளைக் கொண்ட ஒரு வீட்டில் வசிக்கும் 29 வயதான விஜிதரன் மரியதேவதாஸ் இந்த நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் தொடர்பாக விளக்கினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைப் பட்டதாரியான இவர் சிறிலங்கா இராணுவத்தின் யுத்த நடவடிக்கையின் போது முல்லைத்தீவில் தஞ்சம் கோரியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களில் ஒருவராவார். உள்நாட்டு யுத்தம் தீவிரம் பெற்றிருந்த போது, பல ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்ட போது இதனை விஜிதரன் மரியதேவதாஸ் தனது கண்ணெதிரேலே பார்த்திருந்தார். இவர் தான் கண்ட யுத்தத்தின் கொடிய வலிகளை தனது ஓவியங்கள், சிலைகள், பொருட்கள் மூலம் காண்பித்துள்ளார்.

இவர் யுத்தத்தின் வலிகளைக் கூறும்போது அதில் வெறுப்புணர்வு இருக்கவில்லை. மாறாக தனது மக்களின் அனுபவங்களை சாட்சியப்படுத்துவதற்கான ஒரு முனைப்பாகவே இது காணப்படுகிறது. இவரது இந்த ஆக்கங்கள் அனைத்தும் யுத்தத்தின் வடுக்களை மறக்காது தொடர்ந்தும் பாதுகாப்பதற்கான ஒரு களமாகவும், பல்வேறு தரப்பினராலும் துரோகமிழைக்கப்பட்ட மக்களின் நினைவுகளைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்குமான ஒரு அரசியலாகவே காணப்படுகிறது.

சிறிலங்காவின் மத்திய பகுதியான அனுராதபுரத்தை யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் ஏ-09 நெடுஞ்சாலையில் கிளிநொச்சிக்கு அருகில் மிகப் பாரிய தண்ணீர்க் குழாய் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த இடத்திலிருந்து பின்வாங்கிச் சென்றபோது இத்தண்ணீர்க் குழாயிற்கு குண்டு வைத்து தகர்த்தனர். தரையில் விழுந்த இத்தண்ணீர்க் குழாயானது யுத்தம் முடிவடைந்த பின்னர் யுத்த நினைவுச் சின்னமாக மாறியது.

lanka-ealam-art-war-memorial- (1)

lanka-ealam-art-war-memorial- (4)

தரையில் தகர்ந்த நிலையில் காணப்படும் நீர்க்குழாயானது போரில் வீழ்ந்த தமிழ் மக்களைக் குறிப்பதாகவும் விஜிதரன் தனது 15 பக்கத்தில் வரைந்துள்ள யுத்தம் தொடர்பான அனுபவங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழாயிற்குள்ளே மனிதர்கள் அடைக்கப்பட்டுள்ளது போன்ற தோற்றத்தைச் சித்தரிப்பதற்காக சிறிய படங்களை இவர் வரைந்துள்ளார். இதற்குள்ளே பனைமரம் வளர்ந்திருக்கும் காட்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் போது மக்கள் இடம்பெயர்ந்தமை, இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் சென்றமை, முகாங்களில் தங்கியிருந்தமை போன்றவற்றை வர்ணிக்கும் படங்களையும் விஜிதரன் வரைந்துள்ளார். ஈருருளிகளில் தமது வீடுகளிலிருந்து வெளியேறிய குடும்பங்கள் தொடர்பாகவும் விஜிதரன் விளக்கினார். இவர்கள் தமது ஈருருளிகளில் தமக்கு அவசியம் தேவையான சில சமையற் பாத்திரங்கள், உடுப்புக்கள், மண்வெட்டி போன்றவற்றை எடுத்துச் சென்றார்கள். பல மாதங்களாக இவ்வாறே இவர்கள் பயணித்தனர்.

இவர்கள் இராணுவம் தம்மை நெருங்கி வரும் வரை கூடாரங்கள், அகழிகள், முகாங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்திருந்தனர். இவர்கள் இறுதியாக நந்திகடல் அருகிலுள்ள சிறிய ஒடுங்கிய சதுப்பு நிலப்பகுதியில் தஞ்சம் புகுந்தனர். வஜிதரன் எமக்கு கடற்சிப்பிகளைக் காண்பித்தார். அதில் அவர் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களின் காட்சிகளை வரைந்திருந்தார். இந்த இடத்திலேயே இவர் தனது சித்தி ஒருவரை எறிகணைக்கு பலிகொடுத்திருந்தார். இவரது சித்தி சமைப்பதற்காக வெளியில் சென்ற போதே எறிகணை வீச்சில் பலியாகினார்.

‘மண்வெட்டி என்பது எமக்கு இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகிறது. ஏனெனில் நாங்கள் விவசாயிகள். நாங்கள் எமது தோட்டங்களில் பயிர் செய்வதற்கு மண்வெட்டியைப் பயன்படுத்துகிறோம். இந்த வகையில், இது நாம் உணவைப் பெற உதவுகிறது. எம்மை எறிகணைகளிலிருந்து பாதுகாப்பதற்கு பதுங்குகுழிகள் அமைப்பதற்கும் இது எமக்கு உதவியது. நாங்கள் ஓடிக்கொண்டிருந்த போது மண்வெட்டியானது எமது உயிரைப் பாதுகாக்க உதவியது’ என விஜிதரன் தெரிவித்தார். மண்வெட்டி என்பது இவரைப் பொறுத்தளவில் வாழ்க்கைக்கான குறியீடாகக் காணப்படுகிறது.

இதனை இவர் தனது சித்திரங்களில் முக்கியத்துவப்படுத்தியுள்ளார். ஈருருளி போன்றே மண்வெட்டியும் இங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.  விஜிதரனை நாங்கள் சந்தித்த போது, ஈருருளியின் உதிரிப்பாகங்கள், எறிகணையின் உடைந்த பகுதி மற்றும் சில ரவைக் கோதுகளுடன் காட்சிப் பொருள் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருந்தார். இந்த இரும்புத் துண்டுகள் இவரது வாழ்வில் இடம்பெற்ற துன்பகரமான சம்பவங்களை முழுமையாக உணர்த்தி நிற்கின்றன.

lanka-ealam-art-war-memorial- (2)lanka-ealam-art-war-memorial- (5)

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வீதியானது நாட்டின் மேற்குக் கரையோரத்தைத் தொட்டுச் செல்கின்றது. இங்கு பனைமரங்கள் காணப்படுகின்றன. அத்துடன் ஆழமான நீல வானின் கீழே பல மைல்கள் தூரம் வரை கடல்நீரேரி அமைந்துள்ளது. இந்த வீதியினுடாகப் பயணிக்கும் போது கடலை நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் கூட, இதன் வரட்சியான, உப்புக் காற்றை உணர முடிகிறது. வீதியானது மிகவும் சுமூகமாகச் செல்கிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் காவுகொள்ளப்பட்டு, பல இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து, கிராமங்கள் அழிக்கப்பட்டு, சமூகங்கள் அழிக்கப்பட்டு, நாட்டில் மிகவும் ஆழமான பிரிவினையை ஏற்படுத்திய யுத்தத்தின் வடுக்களை மறந்து பயணிக்கக் கூடிய விதத்தில் இந்த வீதி செப்பனிடப்பட்டுள்ளது.

மே 2009ல் அதாவது ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஈழப்போர் முடிவிற்கு வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான யுத்தமானது வெற்றி கொள்ளப்பட்டதாக சிறிலங்கா இராணுவத்தால் அறிவிக்கப்பட்டது. யுத்தத்தை வெற்றி கொண்ட சிறிலங்கா தலைவர்கள் 2015ல் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். இதன்பின்னர் சிறிலங்காவில் கூட்டணி ஆட்சி உருவாக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தின் இராணுவ ஆளுநர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரை ஆளுநர் பதவியில் அமர்த்தியமையானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியிருந்தது. பல்வேறு தமிழ் அமைப்புக்களின் கூட்டணியான தமிழத் தேசியக் கூட்டமைப்பானது சிறிலங்காவின் எதிர்க்கட்சியாக உள்ளது. யுத்தம் முடிவடைந்த கையோடு கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட குற்றங்களை மறைத்ததுடன், புலிகள் மீது யுத்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது.

போர்க் குற்றங்கள் தொடர்பில் மேலும் பொறுப்புக்கூறல்கள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்த அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்துவதில் இது தவறியது. தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என புலம்பெயர் தமிழ் சமூகமானது தொடர்ந்தும் போராடியது. யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களின் உண்மையான எண்ணிக்கை என்னவென்று எவருக்கும் தெரியாது. ஆகஸ்ட் 2008 மற்றும் மே 2009 காலப்பகுதியில் 70,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாகவும், மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டது.

தேசிய நல்லிணக்கத்திற்கான புதிய வழிகள், மரணமானோர், காணாமற்போனோர், நில உரிமையாண்மை தொடர்பாகவும் புதிதாக உருவாக்கப்பட்ட அதிபர் செயலணியானது தற்போது ஆராய்ந்து வருகிறது. இனப் பாகுபாட்டினைத் தீர்ப்பதற்கான புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஜனநாயக ஆட்சியானது மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னமும் சில பிரச்சினைகள் தீர்க்கப்படாது உள்ளன.

போருக்குப் பின்னான சிறிலங்காவில் மீள்கட்டுமானம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி போன்றன தொடர்பாக அதிகம் பேசப்படுவதுடன் தமிழர் வாழிடங்களில் உள்ள போர் வெற்றிச் சின்னங்கள் மற்றும் அதன் வெற்றியாளர்கள் தொடர்பாகவும் பேசப்படுகின்றன. போரை வெற்றி கொண்ட வீரர்களை சிறிலங்கா அரசு கொண்டாடி வருகிறது. போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்தும் இவ்வாறான வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்ற போதிலும் போரில் பாதிக்கப்பட்டவர்களின் துக்கங்களில் பங்கு கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. ‘நாங்கள் தற்போதும் கதை சொல்லும் நிலையிலேயே உள்ளோம். நாங்கள் இது தொடர்பான கருத்துக்களை அல்லது விமர்சனங்களைக் கூறும் நிலைக்கு இன்னமும் செல்லவில்லை’ என இளம் திரையரங்கு கலைஞரும், புத்திஜீவியுமான றுகானீ பெரேரா தெரிவித்தார்.

நாம் மக்களின் துயர் தோய்ந்த நிறையக் கதைகளைச் செவிமடுத்துள்ளோம். கதை கூறுபவர்கள் பொதுவான மொழியில் பேசவில்லை. அவர்கள் தம்மீது இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிப்படுத்துகிறார்கள். இதேபோன்று சிறிலங்கா அரச தரப்பினர் சிங்கள பௌத்தர்களுக்கு ஆதரவாக போர் நினைவகங்களை போர் வெற்றியாளர்களைப் புகழ்ந்துரைப்பதற்காக நிர்மாணித்துள்ளனர். தமிழர் பகுதிகளில் பௌத்த ஆலயங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் தொடர்ந்தும் தாம் சந்தித்த துன்பங்களை நினைத்த வண்ணமுள்ளனர். சமூகத்திற்கு இடையில் சிங்கள பௌத்த அரசிற்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தின் கொடிய நினைவுகளைத் தமிழர்கள் தொடர்ந்தும் தம்முடன் வைத்திருக்கின்றனர். சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த வரலாறு ஒன்றை உருவாக்கியுள்ளது. உண்மை மட்டுமே கதைகளாக இருக்க முடியும்.

பின்னர் விஜிதரன் எம்முடன் முல்லைத்தீவுக்குப் பயணித்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரும் இவரது குடும்பத்தவர்களும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த முல்லைத்தீவின் ஊடாக நாங்கள் பயணித்தோம். இவர்கள் வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான மெல்லிய விளிம்பில் நடந்து சென்ற அந்த நினைவுகளை விஜிதரன் மீட்டினார். அவர் எம்மைப் புதுக்குடியிருப்புக்கு கூட்டிச் சென்றார். இங்கு சிறிலங்கா அரசாங்கத்தால் பாரிய யுத்த நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அல்லித் தடாகத்தின் மத்தியில் சிங்கத்தின் சிலைகளால் பாதுகாப்பளிக்கப்பட்ட ஒரு நடைபாதை அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு துப்பாக்கி மற்றும் கொடியை ஏந்தியவாறு இராணுவ வீரர் ஒருவர் நிற்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தடாகம் முழுமையிலும் அருங்காட்சியக மாதிரி வடிவம் ஒன்றும் அதில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் ‘நீர்மூழ்கிக்கப்பல்கள்’ போன்றன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தென்னிலங்கையிலிருந்து இந்த யுத்த நினைவகங்களைப் பார்வையிடுவதற்காக சிங்கள மக்கள் சுற்றுலா மேற்கொள்கின்றனர். கடந்த காலத்தில், புலிகள் அமைப்பின் தலைவர் வசித்த பதுங்குகுழிகள் மற்றும் இவரது தங்குமிடத்தைப் பார்வையிடுவதற்காக பெருந்திரளான சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டு அவற்றைப் பார்ப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வற்றாப்பளை அம்மன் ஆலயத்தை நோக்கி நாங்கள் சென்ற போது, ‘யுத்தம் முடிவடைந்த போது இந்தக் கடல்நீரேரியானது இறந்த உடலங்களால் நிரம்பியிருந்தது. அப்போது இதில் தண்ணீரைப் பார்க்க முடியவில்லை’ என விஜிதரன் கூறினார்.

lanka-ealam-art-war-memorial- (3)lanka-ealam-art-war-memorial- (6)

நந்திக் கடல்நீரேரி முழுமையும் கண்ணகை அம்மன் ஆலயத்தின் கோபுரம் பரந்து காணப்பட்டது. ‘இது மட்டுமே இறுதி யுத்தத்தின் சாட்சியமாக உள்ளது’ என யாழ்ப்பாணத்திலுள்ள எழுத்தாளரான நிலாந்தன் கூறினார்.  யாழ்ப்பாணமானது தமிழ் மக்களின் கலாசாரத் தலைநகரமாக விளங்குகிறது. இது இலங்கையை இறுதியாக ஆண்ட தமிழ் மன்னனின் காலத்தில் தலைநகராக இருந்தது. யாழ்ப்பாணப் பொதுநூலகமானது தமிழர் கலாசாரத்தைப் பிரதிபலிக்கின்றது. யாழ் பல்கலைக்கழகமானது தமிழர்களின் கல்விமான்களாக உருவாக்க வழிவகுக்கிற. இதே போன்று இங்குள்ள ஆலயங்கள் மற்றும் தேவாலயங்கள் பல்மத சமூகத்தை உருவாக்கியுள்ளது. தமிழ் மக்கள் தமது வரலாறு தொடர்பாகவும் தமது கலாசாரம் தொடர்பாகவும் பெருமை கொள்வதற்கு இவை போதுமானதாகும். ஜூன் 01, 1981 அன்று சிறிலங்காப் படைகளால் யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட போது, அது கலாசாரப் படுகொலையாகவே நோக்கப்பட்டது.

இது தற்போது மீளவும் கட்டப்பட்டுள்ளது. யுத்த காலத்தில், யாழ்ப்பாணத்தின் சனத்தொகை அரைவாசியாகக் குறைவடைந்தது. பழைய ஒல்லாந்தர் கோட்டையானது குண்டு வீச்சின் போது தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நீரேரியிலுள்ள கோட்டையும் இதற்கு சான்றாகும். ஆனாலும் தமிழ் மக்களின் கலாசாரம் மற்றும் அவர்களின் சமூகத்தை மீளக் கட்டியெழுப்பும் ஓர் முக்கிய மையமாக யாழ்ப்பாணம் விளங்குகின்றது.

இந்தியாவின் டில்லி கலைக் கல்லூரி மற்றும் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறிய ரி.சனாதனன் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தமது நிலங்களை இழந்த தமிழ் மக்களிடம் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டார். இவர் தமிழ் மக்களின் இன்னல்கள் தொடர்பாக 320 பக்கங்களில் விபரித்துள்ளார். இவர் யுத்தத்தின் போது வீடிழந்தவர்களின் சாட்சியங்கள், நினைவுகளை இதில் பதிந்துள்ளார்.

‘யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளைப் பதிதல் மட்டுமே எனது பணியாகும்’ என சனாதனன் தெரிவித்தார். இவரது மாணவர்களான புஸ்பகாந்தன் மற்றும் கஜீந்திரனும் இவருடன் இணைந்து பணியாற்றுகின்றனர். போரின் போது கணவனை இழந்தவர்கள் மற்றும் காணாமற் போனோர் போன்றோர் தொடர்பான சாட்சியங்களைப் பதிவு செய்வதே மட்டக்களப்பைச் சேர்ந்த நிர்மலவாசனின் பணியாகும்.

போரானது இலக்கியத்தில் புதிய பிரிவொன்றை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ‘வடு இலக்கியம்’ சார்ந்த கவிதைகள் இதன்மூலம் எழுதப்படுகின்றன. போரின் சாட்சியங்களைக் கொண்டு எழுத்தாளர் பி.அகிலன் கவிதைகள் வரைந்துள்ளார். இவரால் எழுதப்பட்ட ‘சரமகவிகள்’ இறுதிக்கட்ட யுத்தத்தின் நிலையை எடுத்துக் கூறுகின்றது. ஆனால் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தமது மனங்களை ஆற்றுவதற்கான ஒரு இடம் அமைக்கப்பட வேண்டும் என மருத்துவ கலாநிதி தயா சோமசுந்தரம் போன்ற கல்விமான்கள் கூறுகின்றனர். யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரியின் உளவியல் வல்லுனரும் ‘வடு நிறைந்த மனங்களும் சமூகங்களும்’ என்கின்ற பெயரில் நூல் வெளியிட்டவருமான தயா சோமசுந்தரம் மக்கள் தமது மனக்குறைகளை சொல்லி அழுவதற்கு ஒரு இடம் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். இந்த உரிமை மறுக்கப்படுவது கூட ஒருவகையான போர்க் குற்றமே என்பது தயா சோமசுந்தரத்தின் வாதமாகும்.

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது மனங்களை ஆற்றுப்படுத்தி இழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்குப் பொதுவான நாளொன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் சோமசுந்தரம் தெரிவித்தார். இது தொடர்பான பரிந்துரை ஒன்று மீளிணக்கத்திற்கான அதிபர் செயலக செயலணியை சந்திரிக்கா குமாரதுங்க தலைமை தாங்கிய போது கையளிக்கப்பட்டது.

ஆனால் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பம் மற்றும் வேதனை போன்றன சிறிலங்கா அரசால் அதிதீவிரமாகக் கவனத்திற் கொள்ளப்படவில்லை. உண்மையான வெற்றியாளர் ஒருவர் பாதிக்கப்பட்டவர்கள் தமது துன்பங்களை ஆற்றுவதற்கான நிலையை உருவாக்கிக் கொடுப்பார் என டில்லியிலுள்ள தென்னாசியப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் சமூகவியலாளரான சசங்க பெரேரா தெரிவித்தார். பிரதான அரசியற் கட்சிகள் தேர்தல் அரசியலை மட்டுமே நோக்காகக் கொண்டு பயணிக்கின்றன. இதனால் இவர்கள் நல்லிணக்கத்தைக் கருத்திற் கொள்ளவில்லை. ஆகவே இந்த நல்லிணக்கமானது கலை, புலமை மற்றும் எழுத்து மூலம் மட்டுமே வெளிக் கொணரப்பட வேண்டும் என பெரேரா தெரிவித்தார்.

சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது மென்மை அதிகாரத்தின் மீது தங்கியுள்ளது. இது பௌத்த மதத்தை தமிழர் வாழிடங்களில் நிலைநாட்ட விரும்புகிறது என எழுத்தாளர் அகிலன் கூறினார். பௌத்த சிலைகள் மற்றும் ஆலயங்களை வடக்கில் நிர்மாணிப்பதானது முற்றிலும் கலாசார கொலனித்துவம் எனவும் இவை நல்லிணக்க முயற்சிகளுக்கு ஊறுவிளைவிக்கும் எனவும் கல்விமான்கள் வாதிடுகின்றனர். வேறு சமயத்தவர்களும் தமது அடையாளங்களை நிலைநாட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். புலம்பெயர் மக்களின் நிதி ஆதரவுடன் யாழ்ப்பாணத்தில் ஆலயப் புனரமைப்புக்கள் இடம்பெறுவதாக கலைஞர் ஒருவர் குறிப்பிட்டார்.

பதிலி அரசியல் மற்றும் அடையாளப்படுத்தல்கள் போன்றன பிளவுபட்ட நாட்டில் ஏற்பட்ட வடுக்களை ஆற்றுவதற்கு ஒருபோதும் உதவாது. எழுத்தாளர் சேரன் ஒருமுறை எழுதியிருந்தார்-

 ‘நாங்கள் அனைவரும் அப்பால் சென்றுவிட்டோம்;

 எங்கள் கதையைக் கூறுவதற்கு யாரும் இல்லை.

இப்போது, காயப்பட்ட பெரிய நிலம் மட்டுமே எஞ்சியுள்ளது.

நாங்கள் திரும்பி வரும் வரை எந்தவொரு பறவையும்

இதற்கு மேலாக பறக்காது’ 

ஆங்கிலத்தில் –  Amrith Lal
வழிமூலம்      –  Indian express
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *