மேலும்

இன்று பிற்பகல் கொழும்பு வருகிறார் ஐ.நா பொதுச்செயலர்

Ban Ki Moon - Zeid Raad Al Husseinசிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மூன்று நாள் பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அமைச்சர்களையும் சந்திக்கவுள்ள ஐ.நா பொதுச்செயலர்,  நாளை நல்லிணக்கத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தொனிப் பொருளில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க காலிக்கும் செல்லவுள்ளார்.

நாளை மறுநாள் யாழ்ப்பாணம் செல்லும் அவர், வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிடவுள்ளதுடன், வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

நாளை மறுநாள் கொழும்பில் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் உரையாற்றவுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், தனது பயணத்தின் முடிவில், கொழும்பிலுள்ள ஐ.நா பணியகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளார்.

இதற்கிடையே, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிங்களப் பேரினவாத அமைப்புகள் சில போராட்டங்களை நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

அதேவேளை, காணாமற்போனோரின் உறவுகளும், தமது பிரச்சினைகளை ஐ.நா பொதுச்செயலருக்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *