மேலும்

எதிரி பலவீனமடைந்துள்ள போது தான் குரல்வளையைப் பிடிக்க வேண்டும் – சேருவிலவில் யதீந்திரா

jathiஆட்சி மாற்றத்தால் தெற்கு பலவீனமடைந்திருக்கிறது. எங்களுடைய எதிரி பலவீனமடைந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் அவன் குரல்வளையை நாங்கள் பிடிப்பதற்கான தருணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட இளம் வேட்பாளரும் அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.

நேற்று திருகோணமலை சேருவில தொகுதியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“2009இல் விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர், எங்களுக்கு முன்னால் இருந்த ஒரேயொரு நம்பிக்கை, அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் தான்.

அன்று பல குரல்கள் இருப்பது தமிழ் மக்களின் பிரச்சினைகளை அனைத்துலகத்தின் முன்னால் ஆணித்தரமாக முன்வைப்பதற்கு தடையாக இருந்துவிடும் என்பதை உணர்ந்தே, விடுதலைப் புலிகள் இயக்கம் அதுவரை தங்களுடன் முரண்பட்டு நின்ற அனைத்து கட்சிகளையும் ஒரு இடத்திற்கு கொண்டு வந்து அவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக ஐக்கியப்படுத்தினர்.

அன்று விடுதலைப் புலிகள் அவ்வாறானதொரு காரியத்தை செய்யாமல் இருந்திருந்தால் இன்று நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்திருக்கமாட்டோம்.

னவே இன்று நாங்கள் ஒரு கூட்டமைப்பாக இருக்கிறோம் என்றால் அதற்கு பின்னால் பல்லாயிரணக்கணக்கான இளைஞர் யுவதிகளின் தியாகங்கள் இருக்கின்றன. இதற்காக அவர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றனர்.

அவர்களது தியாயங்களாலும் அர்ப்பணிப்பினாலும் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எக்காரணம் கொண்டும் நாம் பலவீனப்படுத்திவிடக் கூடாது. இந்த அடிப்படையில்தான் நான் இந்த தேர்தல் களத்தில் நிற்கிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது உங்களின் பலம் அதை நீங்கள் சிதைத்துவிடக் கூடாது. அதனை பேணிப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு.

நாங்கள் ஏன் ஒரு சந்தர்ப்பங்களைக் கோருகிறோம் என்பதற்கு பலரும் பலவிதமான பதிலை உங்களுக்குச் சொல்லலாம். என்னிடமும் ஒரு பதிலுண்டு.

அதாவது, இது பேரம்பேசல் அரசியலை கையாளுவதற்கு தகுந்த தருணமாக இருக்கின்றது என்பது எனது அபிப்பிராயம்.

ஆட்சி மாற்றம் தமிழ் மக்களின் வாழ்வில் எதிர்பார்த்தது போன்று பெரியளவில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வந்துவிடவில்லை.

ஆனால் ஆட்சி மாற்றத்தால் தெற்கு பலவீனமடைந்திருக்கிறது. இனவாத சக்திகளுக்குள் பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

இதனை இன்னும் தெளிவாக சொல்வதானால் எங்களுடைய எதிரி பலவீனமடைந்திருக்கிறான். எதிரி பலவீனமடைந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் அவன் குரல்வளையை நாங்கள் பிடிப்பதற்கான தருணமாகும்.

ஒரு புறம் அனைத்துலக அழுத்தம் இன்னொரு புறம் புலம்பெயர் சமூகத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள் இவற்றினால் கொழும்பு தொடர்ச்சியான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.

இப்படியானதொரு சூழலில்தான் ஆட்சி மாற்றம் தெற்கின் ஆட்சியாளர்களை பலவீனப்படுத்தியிருக்கிறது. இப்படியானதொரு சூழலில் நாங்கள் எங்களது அரசியல் பலத்தைக் கொண்டு சில விடயங்களில் அவர்களுக்கு நெருக்குவாரத்தை கொடுக்கலாம்.

அந்த நெருக்குவாரங்கள் அரசியல் தீர்வை கொண்டு வராவிட்டாலும் கூட சில அடிப்படையான விடயங்களில் சில மாற்றங்களையாவது கொண்டு வரலாம்.

அல்லது ஒரு அரசியல் தீர்விற்கான அடித்தளத்தையாவது நாங்கள் உருவாக்க முடியும்.

அதனை நாங்கள் செய்ய வேண்டுமாயின் அதற்கு எங்களுக்கு அரசியல் பலம் தேவை. எங்களுடைய அரசியல் பலம் என்பது எங்களிடம் இருக்கின்ற நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்கள் மட்டும்தான்.

எனவே இருக்கின்ற ஆசனங்களை நாங்கள் பெறுவதுடன் இன்னும் அதிகமான ஆசனங்களை பெறுவதன் மூலம் எங்களது அரசியல் பலத்தை நாங்கள் உயர்த்திக் கொள்ள முடியும்.

இதற்கு தமிழ் மக்களாகிய நீங்கள் எங்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.

இது ஒரு இறுதி சந்தர்ப்பம் என்னும் அடிப்படையில் கூட்டமைப்பிற்கு ஒரு வாய்ப்பை வழங்குங்கள்.

இதன்பின்னர் கூட்டமைப்பு இப்படியான சுலோகங்களுடன் நிச்சயம் உங்களிடம் வர முடியாது. முக்கியமாக சம்பந்தன் ஐயாவால் வர முடியாது.

எனவே ஒரு இறுதி சந்தர்ப்பத்தை கூட்டமைப்பிற்கு வழங்குங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

“ 20 ஆசனங்கள் எங்களுக்கு கிடைத்தால், நாங்கள் அனைத்துலக சமூகத்திடம், ‘எங்கள் மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியிருக்கின்றனர், எனவே எங்களுடைய மக்களின் கோரிக்கையை நீங்கள் உதாசீனம் செய்ய முடியாது’ என்று கூற முடியும்.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் எங்களுடன் நிற்க வேண்டும் ” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *