மேலும்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – தடுமாறும் மைத்திரி

Ranil-Maithri-Chandrika1994ல் பொதுத் தேர்தல் பெறுபேறு அறிவிக்கப்பட்ட போது, சந்திரிகா குமாரதுங்க இரகசிய இடத்தில் மறைந்திருந்தார். இத்தேர்தல் பெறுபேறால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர் கருதினார். இவரது விசுவாசிகள் மாத்திரமே இவர் தங்கியிருந்த இரகசிய இடத்திற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தேர்தல் பெறுபேறு அறிவிக்கப்பட்ட போது சந்திரிகாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்ததை இவரது விசுவாசிகள் அவதானித்தனர்

‘இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக நாங்கள் பாரியதொரு பரப்புரையை மேற்கொண்டிருந்தோம். ஆனால் 105 ஆசனங்களை மட்டுமே நாங்கள் பெற்றுள்ளோம்’ என ஆழ்ந்த மனவேதனையும் சந்திரிகா இதனைத் தெரிவித்தார்.

மிகப் பலமான நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பதற்கு சந்திரிகாவிற்கு 113 ஆசனங்கள் மட்டுமே தேவைப்பட்டன. இதன் பின்னர் இவர் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியமைக்க வேண்டிய நிலையேற்பட்டது.

2001ல், சந்திரிகா அரசாங்கத்திற்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க நாடு முழுமையில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். சந்திரிகா அரசாங்கத்தில் அங்கம் வகித்த முக்கிய சில நபர்களை ரணில் தனது பக்கம் இழுத்திருந்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலர் எஸ்.பி.திசநாயக்கவும் இதில் ஒருவராவார்.

ஆனால் தேர்தல் பெறுபேறு அறிவிக்கப்பட்ட போது, 109 ஆசனங்களை மட்டுமே ரணில் பெற்றிருந்தார். இந்தச் செய்தி  ரணிலுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது கட்சி 113 ஆசனங்களை வென்றெடுக்கும் என ரணில் நம்பியிருந்தார். இதனால் அரசாங்கத்தை அமைப்பதற்காக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் ஆதரவை ரணில் பெற்றுக் கொள்ள வேண்டியேற்பட்டது.

2004ல் ரணிலின் அரசாங்கத்தை சந்திரிகா தோற்கடித்து தன்வசமாக்கிக் கொண்டார். இதற்காக சந்திரிகா ஜே.வி.பியின் உதவியை நாடியிருந்தார். இதன் போது ரணில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என சந்திரிகா பிரச்சாரம் செய்திருந்தார்.

ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றின் உதவியுடன் ரணிலுக்கு எதிராக சந்திரிகா தேசப்பற்று சார்ந்த பரப்புரையை மேற்கொண்டார். சோம தேரரின் பரப்புரையால் சந்திரிகாவினால் ரணிலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தேசப்பற்றுப் பரப்புரையானது சிங்கள பௌத்த பரப்புரையாக மாற்றமுற்றது.

எனினும் இத்தேர்தலில் சந்திரிகா மற்றும் ஜே.வி.பி இணைந்து 105 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டனர். இதனால் அரசாங்கத்தை அமைப்பதற்கான மீதி ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்காக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் உதவியை சந்திரிகா நாடினார்.

சிறிலங்காவின் தேர்தல் வரலாற்றில் இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் 113 ஆசனங்களைத் தன்னால் பெற்றுக் கொள்ள முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு கனவு காணமுடியும்?

2010ல் ஐ.தே.க 60 ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. ஆகவே தேர்தலில் வெற்றிபெற வேண்டுமாயின் ஐ.தே.க இன்னமும் 53 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 2010ல் அடைந்ததை விட தற்போது இரண்டு மடங்கு ஆசனங்களைப் பெறுவதற்கான முயற்சிகளை ஐ.தே.க மேற்கொள்ள முடியும்.

2010 அதிபர் தேர்லில் மகிந்த ராஜபக்சவால் எவ்வாறு 140 தேர்தல் தொகுதிகளில் வெற்றிபெற முடிந்ததெனில் தற்போது 113 ஆசனங்களைப் வென்றெடுக்க எங்களால் முடியாதா என ஐ.தே.க வாதிடக்கூடும். இந்த வாதத்தை அசட்டை செய்துவிட முடியாது.

எனினும்,  2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மகிந்தவும் சரத் பொன்சேகாவும் பெற்றுக் கொண்ட வாக்குகளின் வித்தியாசம் 1.6 மில்லியன் ஆகும்.

இதற்கும் மேலாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தலைமை வகிக்கும் மைத்திரி அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது ஐ.தே.க தனது ஆதரவை வழங்கியிருந்தது.

இந்நிலையில் மைத்திரி இல்லாது ஐ.தே.கவால் தேர்தலில் வெற்றி கொள்ள முடியுமா? இவை பதில்களுக்காகக் காத்திருக்கப்படும் வினாக்களாகும்.

இளைஞர்களின் வாக்குகள் எனப் பார்க்கும் போது ஐ.தே.கவின் வாக்குப் பலத்துடன் மட்டும் மைத்திரி தேர்தலில் வெற்றி பெறவில்லை. தற்போதைய இளைஞர்களின் வாக்குப் பலத்துடனும் மிதக்கும் வாக்காளர்களின் – (Floating Votes ) (சுயாதீன) வாக்குப் பலத்துடனுமே மைத்திரி வெற்றி பெற்றிருந்தார்.

இதற்காக சரத் பொன்சேகா, அர்ஜுன ரணதுங்க, சம்பிக்க ரணவக்க, ஹிருணிக்கா பிறேமச்சந்திர, ராஜித சேனாரத்ன, துமிந்த திசநாயக்க ஆகியோர் பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளனர். இந்த வெற்றிக்கு ஜே.வி.பியும், மகிந்த எதிர்ப்புத் தரப்பினரின் அர்ப்பணிப்பும் காரணமாகும்.

தற்போது இந்த அரசியற் பிரிவுகளைக் கொண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கான கூட்டணி ஒன்றை உருவாக்க மைத்திரி திட்டமிடுகிறார். இது மிதக்கும் இளைஞர்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் எனக் கூறப்படுகிறது.

தமது வாக்குகள் மைத்திரிக்கா அல்லது ஐ.தே.கவிற்கா சென்றடைய வேண்டும் என்பதை இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும். மகிந்தவுக்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிராகவே சிறிலங்கா வாழ் இளைஞர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர் என்பது நினைவிற் கொள்ளப்பட வேண்டும்.

இந்த இளைஞர்களின் வாக்குகள் மகிந்தவை மட்டும் தோற்கடிக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமை தாங்கிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியை இளைஞர்களின் வாக்குகள் தோற்கடித்துள்ளன என்பதே உண்மையாகும்.

ஆகவே இளைஞர்களின் வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களை மைத்திரி பொதுத்தேர்தலில் களமிறக்கினால் மைத்திரிக்கு ஆதரவாக இளைஞர்களினதும் சுயாதீன வாக்காளர்களினதும் வாக்குகளும் அளிக்கப்படுமா?

மைத்திரி இல்லாது ஐ.தே.க தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதற்கான ஒரேயொரு சாதகமான காரணி இது மட்டுமேயாகும்.

தற்போதைய அரசியலில் கடந்த இரண்டு பத்தாண்டுகளாக பரிச்சயமுள்ள முகங்களையே தற்போது மைத்திரி தேர்தலில் களமிறக்கவுள்ளார். இவர்களை மக்களுக்கு அதிகம் தெரியும்.

ஆனால் ரணில் புதியவர்களையே தற்போதைய தேர்தலில் களமிறக்கவுள்ளார். ஆகவே மைத்திரியின் பழைய மற்றும் பலம்வாய்ந்த வேட்பாளர்களும் ரணிலின் புதிய வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடும் போது யார் வெற்றி பெறுவார்கள்?

ஆகவே இதில் ஐ.தே.க சவால்களையும் கடும் போட்டியையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

இதேவேளையில் மைத்திரியும் தேர்தலில் இலகுவாக வெற்றி பெறுவார் எனக் கூறமுடியாது. ஏனெனில், மகிந்தவின் தேர்தல் பிரவேசத்தை மைத்திரி நிறுத்துவாரானால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மைத்திரி வழங்க வேண்டியேற்படும்.

மகிந்தவுடன் இணைந்து மைத்திரி ஆகஸ்ட் தேர்தலில் போட்டியிடுவரானால், ஜனவரியில் மைத்திரி பெற்றுக் கொண்ட மிதக்கும் வாக்குகளையும் மற்றும் இளைஞர்களின் வாக்குகளையும் ஐ.தே.க தன்வசப்படுத்தி விடும்.

மைத்திரி, மகிந்தவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இது நன்மை பயக்கும். இது நடந்தால் மைத்திரி தற்போது தக்கவைத்துள்ள இளைஞர்களின் வாக்குகளை இழக்க வேண்டியேற்படும்.

இது மிகவும் சிக்கலான ஒரு சூழல். மைத்திரியும் இந்த விடயத்தில் தற்போது மிதக்கும் ஒரு அரசியல்வாதி போல் தென்படுகிறார். அதாவது இவர் எவருடன் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிடுவது என தன் மனதிற்குள் அங்கலாய்ப்பது போலத் தெரிகிறது.

ஆங்கிலமூம்   – உபுல் ஜோசப் பெர்னான்டோ
வழிமூலம்       – சிலோன் ரூடே
மொழியாக்கம் – நித்தியபாரதி