மேலும்

மாணவியின் சடலத்தின் மீது அரசியல் ஆதாயம் தேடமுனையும் மகிந்த – அமைச்சர் விஜேதாச கண்டனம்

Wijeyadasa Rajapaksheபுங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் சடலத்தின் மீது இனவாத அரசியல் ஆதாயம் தேடும் கேவலமான முயற்சியில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளதாக, நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

”மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தை உலகமே அனுதாபத்துடன் நோக்கும் இந்தத் தருணத்தில், நாட்டின் முன்னாள் அதிபர் இந்தச் சம்பவத்தை இனவாதத்தை தூண்டும் பகடைக்காயாக உபயோகித்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.

தேசப்பற்றுடைய எந்தவொரு நபராலும் இதுபோன்ற மிலேச்சதனமான செயற்பாடுகளை தாங்கிகொள்ள இயலாது.

ஆனால் மகிந்த ராஜபக்ச, தான் இந்த நாட்டின் முன்னாள் அதிபர் என்ற உணர்வின்றி இது குறித்து மிகவும் இழிவானதும் கீழ்த்தரமானதுமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்தி குழப்பநிலையை உருவாக்க வேண்டுமென்பதே அவரது ஒரே குறிக்கோள்.

இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓடுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

மாணவியின் சடலம் கிடைத்ததும் இதனை தாங்கிக்கொள்ள இயலாத பொதுமக்கள், கோபத்தில் எதிர்பாராத விதமாக நடந்து கொண்டதை சம்பவத்தை இனவாதரீதியில் நோக்குவது தவறாகும்.

இது மனித சுபாவம். இதனை கட்டுப்படுத்தி வழிநடத்துவது தான் எமது கடமை.

அனைத்து தரப்பினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பினை நாம் முறையாக முன்னெடுத்துள்ளோம்.

இராணுவத் தலையீடு இன்றி காவல்துறையினரின் ஒத்துழைப்பினை மாத்திரம் கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, விஜயகலா மகேஸ்வரன், ரவூப் ஹக்கீம் ஆகியோரும் தமிழ் ஊடகங்களும் திருப்தி வெளியிட்டுள்ளனர்.

யாழ். நீதிமன்றம் மீது கல்லெறியப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருந்தால் அது விசாரணைகளின் முடிவில் உறுதியாகும்.” என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *