மேலும்

தமிழ்நாடு முதல்வராக நாளை பதவியேற்கிறார் ஜெயலலிதா

jaya-roshaiyaதமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா நாளை பதவியேற்கவுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதையடுத்து, அவர் முதலமைச்சராகப் பதவியேற்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்றுகாலை தனது பதவியை விட்டு விலகினார்.

அவர் ஆளுநர் ரோசையாவிடம் தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்தார். அத்துடன் இன்று காலை நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், சட்டமன்ற கட்சித் தலைவராக ஜெயலலிதா தெரிவு செய்யப்பட்டது குறித்த கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் கையளித்திருந்தார்.

இந்தநிலையில், இன்று பிற்பகல் தமிழ்நாடு ஆளுநர் ரோசய்யாவை சந்தித்த ஜெயலலிதா, சட்டமன்ற தலைவராக தாம் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் மற்றும் அமைச்சர்கள் பட்டியலை அளித்தார்.

jaya-roshaiya

இந்தநிலையில், சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

ஜெயலலிதா பதவியேற்பு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்கவுள்ளதுடன், அவர் உட்பட 29 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்கவுள்ளனர்.

தமிழ்நாடு மாநில முதல்வராக ஜெயலலிதா ஐந்தாவது முறையாகப் பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்ததை அடுத்து, அவர் பதவியிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *