மேலும்

மே-19 பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட நாள் – வெற்றி விழா அல்ல என சிறிலங்கா அறிவிப்பு

rajitha senaratneசிறிலங்காவில் போர் வெற்றி நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த மே மாதம் 19ஆம் நாளை, பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட நாளாகக் கடைப்பிடிக்கப் போவதாக, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அரசாங்கத்தின் இந்த முடிவை, அமைச்சரவை பேச்சாளர், ராஜித சேனாரத்ன அறிவித்தார்.

“போர் வெற்றி நாளாக இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையில் வாழும் ஒரு சமூகத்திற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திய ஒரு நாளை போர் வெற்றி என்று கருதுவதற்கு தற்போதைய அரசாங்கம் தயாரில்லை.

அதேவேளை, போர் முடிவுக்குக் கொண்டு வந்த நாளை, நாட்டில் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட நாளாக அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், பிரிவினைவாதத்தை தோற்கடிப்பதற்காகப் பணியாற்றிய படையினரைக் கௌரவிப்பதற்கான நிகழ்வு, மே 19 ஆம் நாள் மாத்தறையில் நடத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசின் இந்த அறிவிப்பை சாதகமானதாகப் பார்ப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஆனால் போரில் இறந்தவர்கள் காணாமல் போனவர்கள் , சிறையில் இருப்பவர்கள் என்று போர் தொடர்பான பலதரப்பட்ட பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் இதுபோன்ற குறியீட்டளவிலான அறிவிப்புகள் போதாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை நிராகரிப்பதாக, பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் காரணமாக ஏனைய இனத்தவர்களைவிட தமிழர்களே பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர், தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர் அல்ல.

போர் வெற்றியை கொண்டாடுவதன் முலம் சிறுபான்மை இன மக்களின் உள்ளங்கள் பாதிக்கப்படுமென்று அரசாங்கம் தெரிவிக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த முடிவின் மூலம் தற்போதைய அரசின் தேசத்துரோகத் தன்மையே வெளிப்படுத்துகிறது.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது இதற்கான தக்க பதிலடியை வழங்க தேசப்பற்றுள்ள மக்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *