மேலும்

சிறிலங்காவில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ள சீனா

mahinda-xi-boardசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சொந்த இடத்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக சீனா 200 மில்லியன் டொலர்களுக்கும் மேல் வழங்கியிருந்தது. இது சீன அரசாங்கத்தின் சிறந்த முதலீடுகளில் ஒன்றாகக் காணப்படவில்லை.

2013ல் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இந்த விமான நிலையத்தின் ஊடாக நாளொன்றுக்கு ஒரேயொரு விமான பறப்பு மட்டுமே அதாவது டுபாய்க்கான விமான சேவை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

ஜனவரி மாதத்தில், ராஜபக்சவின் மீள்தேர்தல் பரப்புரையானது தோல்வியில் முடிவடைந்த பின்னர், சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான சிறிலங்கா எயர்லைன்ஸ் மத்தல விமான நிலையத்தின் ஊடான தனது பறப்புக்களை இரத்துச் செய்தது.

தனது போட்டி நாடான இந்தியாவின் எல்லையில் தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக, சீனத் தலைமை பல ஆண்டுகளாக சிறிலங்கா அரசாங்கத்தையும் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் ஏனைய அரசாங்கங்களையும் தன் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

மத்திய கிழக்கிலிருந்து ஆபிரிக்கா வரை நீண்டு செல்லும் கப்பல் பாதைகளுக்கு அண்மையில் அமைந்துள்ள சிறிலங்காவில் சீனா 290 மில்லியன் டொலர் பெறுமதியான அதிவேக நெடுஞ்சாலை, 360 மில்லியன் டொலர் பெறுமதியான துறைமுகம் உள்ளடங்கலாகப் பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதற்காக கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து பில்லியன் டொலர்களைக் கடனாக வழங்கியுள்ளது.

இந்நிலையில் 1.4 பில்லியன் டொலர் பெறுமதியில் கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் புதிய துறைமுக நகரம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியை சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ராஜபக்ச சீனாவுக்கு வழங்கியிருந்தார்.

கடந்த ஆண்டில் இரண்டு தடவைகள் சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றதானது இந்தியாவை ஓரங்கட்டுவதில் சீனா வெற்றியடைந்துள்ளது என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் சிறிலங்காவில் புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து சீனாவின் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் புதிய துறைமுக நகரத் திட்டமானது சூழல் சார் சட்டங்களை மீறுகின்றதா மற்றும் மோசடிகளைத் தடுத்தல் போன்றவற்றை ஆராய்வதற்காக இது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

‘சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் இடம்பெறும் என சீனா எதிர்பார்க்கவில்லை’ என சிறிலங்காவின் ஹைலஸ் நிறுவனத்தின் மூத்த பொருளியலாளர் டெசால் டீ மெல் தெரிவித்துள்ளார். ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்புடைய விமானநிலையமானது சீனா தனது முதலீடு தொடர்பாக பல தடவைகள் சிந்தித்துச் செயற்படுவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாக பொருளியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் சீனாவின் போட்டியாளர்கள் சிறிலங்காவுடன் நட்புறவைப் பேண விரைந்துள்ளனர்.

சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரை 2009ல் முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு பத்தாண்டாக ஆட்சிசெய்த ராஜபக்சவுடன் இந்தியாவும் அமெரிக்காவும் சுமூகமான உறவைப் பேணவில்லை.

அதிகளவில் தமிழ் மக்களைக் கொண்ட இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ராஜபக்ச அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருந்தன.

போர்க் காலத்தின் போது சீனா ராஜபக்சவுக்கு இராணுவ மற்றும் இராஜதந்திர உதவிகளை வழங்கியிருந்தது.

சிறிலங்கா அதிபரின் பதவிக்காலத்தை வரையறுத்ததுடன், நாடாளுமன்றுடன் இணைந்து பணியாற்றும் சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது புதுடில்லி மற்றும் வோசிங்டனுடன் மிகவும் வலுவான உறவுகளைப் பலப்படுத்தி வருகிறது.

மே 02 அன்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கான தனது அரச முறைப் பயணத்தை மேற்கொண்டபோது, ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் காண்பிக்கப்படும் ஈடுபாட்டைப் பாராட்டியிருந்தார்.

கடந்த பத்தாண்டில் அமெரிக்க அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் முதன் முதலாக சிறிலங்காவுக்குப் பயணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘சிறிலங்காவுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்ற விரும்புகிறது’ எனவும் ஜோன் கெரி தெரிவித்திருந்தார்.

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். இவர் 1987ன் பின்னர் சிறிலங்காவுக்குப் பயணம் செய்த முதலாவது இந்தியத் தலைவராவார்.

இந்தியப் பிரதமர் சிறிலங்காவில் தங்கியிருந்த நாட்களில் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் கலாசார மற்றும் மத சார் தொடர்புகள் தொடர்பாக வலியுறுத்திக் கூறியிருந்தார். புத்தர் சமாதியடைந்த இடத்திலுள்ள பௌத்த விகாரையை பார்வையிட்டதுடன் வழிபாடு மேற்கொண்டிருந்தார்.

மின்னாலைகள் மற்றும் தொடருந்துப் பாதைகள் போன்றவை அமைப்பதற்கான நிதியை வழங்குவதாகவும் மோடி உறுதியளித்திருந்தார். இவரது பயணத்தின் போது இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு தரப்பும் 1.5 பில்லியன் டொலர் நாணய மாற்றம் தொடர்பாகவும் உடன்பாடு எட்டப்பட்டது.

‘மோடியினுடைய ‘துரிதமான செயல்திறன் மிக்க இராஜதந்திரமானது’ சீனாவிடமிருந்து சிறிலங்கா விலகுவதற்கு உதவியுள்ளது. இதன்மூலம் வர்த்தக மற்றும் இராணுவ உதவி மூலம் தன்னால் கையாளப்படும் ‘முயற்சிக்கப்பட்ட மற்றும் உண்மையான’ தந்திரோபாயங்கள் மூலம் வெற்றியைப் பெறமுடியாது என்கின்ற பாடத்தை சீனா கற்றுக்கொள்ள வேண்டும்’ என ஆய்வாளர் கதிரா பெதியாகொட தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு கட்டுமான உதவிகள் தேவையாக உள்ள அதேவேளையில் சீனாவானது இந்தியாவை விட அதிக நிதியைக் கொண்டுள்ளது. சீன ஆதரவு ஆசிய கட்டுமான முதலீட்டு வங்கியுடன் சிறிலங்கா உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டுள்ளது.

‘நிதித் தேவைகளுக்காக இந்தியா கூட சீனாவின் உதவியை நாடவேண்டி ஏற்படும்’ என கொழும்பிலுள்ள கொள்கைக் கற்கைகளுக்கான நிறுவகத்தின் பிரதி இயக்குனர் டுஸ்னி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

‘சீனா உடனடியாக சிறிலங்காவிலிருந்து விலகிச் செல்லும் என நான் கருதவில்லை. சீனாவுடன் ராஜபக்ச நெருங்கிப் பழகியதை விட சிறிசேன குறைவான ஆர்வத்தையே காண்பிக்கிறார். சிறிசேனவின் நிர்வாகத்துடன் சீனா மகிழ்ச்சியான தொடர்பைப் பேணும்’ என சிட்னிப் பல்கலைக்கழகத்தில் வெளியுறவுக் கோட்பாடு தொடர்பாகக் கற்பிக்கும் விரிவுரையாளர் சாரா கிரகம் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விரு நாடுகளும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான இறுதிக் கட்டப் பேச்சுக்களை மேற்கொள்கின்றன என சீனாவின் அரச ஊடகமான ‘சின்குவா’ ஏப்ரல் 21 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.

சிறிசேன புதிய நகரத் திட்டம் தொடர்பாக இன்னமும் அனுமதி வழங்கவில்லை, ஆனால் இந்த விடயத்தில் ‘படிப்படியாக முன்னேறுவதற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்’ என சீனா தற்போதும் நம்புவதாக சீன வெளியுறவு அமைச்சின் பெண் பேச்சாளர் குவா சன்ஜிங் மே 06 அன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

துறைமுக நகரத் திட்டம் தொடர்பான சூழல் சார் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. இது சீனாவிற்கான பங்களிப்பைத் தடைசெய்யவில்லை.

ராஜபக்சவுடனான அனுபவமானது சீனத் தலைவர்களுக்கான பாடமாக அமைய வேண்டும் என வோசிங்டனிலுள்ள குட்சன் நிறுவகத்தின் மூத்த ஆய்வாளர் ஜோன் லீ குறிப்பிட்டுள்ளார்.

‘மூலோபாய உறவுநிலையை வளர்த்துக் கொள்வதானது சாதாரணமானதல்ல. இவை மிகவும் நடைமுறை சார்ந்தவை. உறுதியானதாக இருக்க வேண்டும். அப்போது அவை மேலும் சிறப்பாக அமையும்’ என ஜோன் லீ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கிலத்தில் – Bruce Einhorn  மற்றும் Anusha Ondaatjie

வழிமூலம் – bloomberg.com

மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *