மேலும்

புனேயை விட்டுப் புறப்பட்டது சிறிலங்கா விமானம் – இந்திய அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு

C_130-landபாகிஸ்தானில் இருந்து குதிரைகளை ஏற்றி வந்த சிறிலங்கா விமானப்படை விமானம், நேற்று அதிகாலையில், புனே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பின்னரே, இந்திய அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் இராணுவம் சிறிலங்கா இராணுவப் பயிற்சி அகடமிக்கு அன்பளிப்புச் செய்த எட்டுக் குதிரைகளை ஏற்றி வந்த, சிறிலங்கா விமானப்படையின் சி-130 விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, புதன்கிழமை மாலை புனே விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானத்தின் நான்கு இயந்திரங்களில் ஒன்று பழுதடைந்த நிலையில், அந்த விமானம் தரையிறக்கப்பட்டதில் இருந்து இந்திய விமானப்படை, இந்தியப் புலனாய்வுப் பிரிவினர், உள்ளூர் காவல்துறையினர் அனைவரும், விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

விமானம் தரையிறக்கப்பட்ட புனே விமான நிலையம், இந்திய விமானப்படையின் மிக முக்கியமான தளமாகும்.

பாகிஸ்தானில் இருந்து அந்த விமானம் வந்ததாலும், அதில் பாகிஸ்தானியக் குதிரைகளுடன், கால்நடை மருத்துவரான பாகிஸ்தானிய இராணுவ மேஜர் ஒருவரும், பயணம் செய்திருந்ததாலும், இந்திய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

விமானம் தரையிறங்கியதில் இருந்து புனே நகரம் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், புலனாய்வுப் பிரிவுகள், இந்திய விமானப்படை, உள்ளூர் காவல்துறை என்பன, தீவிரமான கண்காணிப்பை மேற்கொண்டு வந்தன.

இந்தநிலையில், அவசரமாக கொழும்பில் இருந்து வந்த சிறிலங்கா விமானப்படையின் பொறியாளர்கள், இரவிரவாக மேறகொண்ட திருத்தப்பணிகளை அடுத்து, நேற்று அதிகாலை 4 மணியளவில், குதிரைகள் மற்றும் பாகிஸ்தான் மேஜர் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு, சிறிலங்கா விமானம் புனேயில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

இதையடுத்தே, இந்திய அதிகாரிகள் நிம்மதியடைந்ததாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *