மேலும்

பிரித்தானியா: மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் டேவிட் கமரொன் – 4 இலங்கையர்களில் ஒருவரே வெற்றி

DAVID-CAMERONபிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் டேவிட் கமரொன் தலைமையிலான கொன்சர்வேட்டிவ் கட்சி அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி, வெற்றி பெற்றுள்ளது.

650 ஆசனங்களைக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில், 646 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், அறுதிப் பெரும்பான்மைக்கு தேவைப்படும், 326 ஆசனங்களுக்கு மேலாக- 327 ஆசனங்களை ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 232 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தில் செல்வாக்குப் பெற்ற ஸ்கொட்டிஸ் தேசியக் கட்சி, 56 ஆசனங்களைக் கைப்பற்றி, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

அதேவேளை, சத வீதப்படி, 13 வீத வாக்குகளைப் பெற்ற பிரித்தானிய சுதந்திரக் கட்சிக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பிரித்தானிய பிரதமராக மீண்டும் டேவிட் கமரொன் பதவியேற்கவுள்ளார்.

அதேவேளை, தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபான்ட் உள்ளிட்ட தோல்வியுற்ற கட்சிகளின் தலைவர்கள் தமது பதவிகளை விட்டு விலகியுள்ளனர்.

இந்த தேர்தலில், போட்டியிட்ட நான்கு இலங்கை வம்சாவளி வேட்பாளர்களில், ஒரே ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார்.

ஹம்ப்செயர் வட கிழக்குத் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட, இலங்கையரான, ரணில் ஜெயவர்த்தன, சுமார் 30 ஆயிரம் வாக்குகளால் வெற்றி பெற்றார். அவருக்கு 35,573 வாக்குகள் கிடைத்துள்ளன.

ஹரோ ஈஸ்ட் தொகுதியில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத்தமிழரான உமா குமரன், கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இங்கு, கொன்சர்வேட்டிவ்  வேட்பாளர் பொப் பிளாக்மன் 24,668 வாக்குகளையும், உமா குமரன் 19,911 வாக்குகளையும் பெற்றனர்.

ரூசிலிப், நேர்த் வூட், மற்றும் பின்னர் தொகுதியில், தேசிய லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட சொக்கலிங்கம் யோகலிங்கம் 166 வாக்குகளை மட்டும் பெற்று படுதொல்வியடைந்தார்.

இந்த தொகுதியை 30,520 வாக்குகளுடன் கொன்சர்வேட்டிவ் கட்சி  வேட்பாளர் கைப்பற்றியிருந்தார்.

கேம்பிரிஜ் தொகுதியில், கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட மற்றொரு இலங்கை வம்சாவளியினரான, சாமலி பெர்னான்டோ மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு தோல்வியடைந்தார்.

தொழிற்கட்சி 18,846 வாக்குகளுடன், சுமார் 600 வாக்குகளால் லிபரல் ஜனநாயக கட்சியைத் தோற்கடித்து இந்த தொகுதியைக் கைப்பற்றிய நிலையில், மூன்றாவதாக வந்த சாமலி பெர்னான்டோவுக்கு, 8,117 வாக்குகளே கிடைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *