மேலும்

மகிந்த குடும்பம் சூறையாடிய 18 பில்லியன் டொலர் வெளிநாடுகளில் பதுக்கல் – மங்கள சமரவீர தகவல்

mangala-samaraweeraசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரால், சுமார் 18 பில்லியன் டொலர் பணம், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்ச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, அவர், “மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரால் வெளிநாடுகளில், 18 பில்லியன் டொலர் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தைத் தேடிக் கண்டுபிடிக்கவும், அவற்றை மீட்கவும், நான்கு நாடுகளின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம்  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனுடன் தொடர்புடைய நாடுகளின் விபரத்தை வெளியிட முடியாது.

இந்த 18 பில்லியன் டொலரில், ஏற்கனவே டுபாய் வங்கியில் கண்டறியப்பட்ட 2 பில்லியன் டொலரும் அடங்கும்.

ட்ரான்ஸ்பரன்சி இன்ரநசனல் -ஜேர்மனி அமைப்பினால் தயாரிக்கப்பட்ட பட்டியலின்படி, அரசாங்கச் சொத்துக்களை அபகரித்து வெளிநாடுகளில் பில்லியன் டொலரை கணக்கில் பதுக்கிய அரச தலைவர்களில், ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

அந்தப்பட்டியலில், இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்டோ, 15 தொடக்கம், 35 பில்லியன் டொலர்களை வெளிநாடுகளில் பதுக்கி முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் ராஜபக்ச குடும்பம் உள்ளது.

அதையடுத்து, பிலிப்பைன்சின் பேர்டினன்ட் மார்க்கோஸ், 10 பில்லியன் டொலரையும், சயர் அதிபர் மொபுடு சீசெ சேகோ 5 பில்லியன் டொலரையும், நைஜீரிய அதிபர் சனி அபாச்சா 2 தொடக்கம் 5 பில்லியன் டொலரையும், செய்டி அதிபர் ஜீன் குளோட் டுவாலியர் 300 மில்லியன் தொடக்கம் 800 மில்லியன் டொலரையும், பெரு அதிபர் அல்பேர்ட்டோ பியூஜிமோரி 600 மில்லியன் டொலர்களையும், வெளிநாடுகளில் பதுக்கியவர்களின் பட்டியலில் உள்ளனர்.”என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *