மேலும்

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கிறது சீனா

Colombo-Portsசீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ஊடகங்களின் மூலம் சிறிலங்காவுக்கு சீனா அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

1.4 பில்லியன் டொலர் செலவில் மேற்கொள்ளப்படும், கொழும்பு துறைமுக நகரத் திட்டம், சிறிலங்காவுக்கு அவசியமானது, சிறிலங்காவின் அபிவிருத்திக்கு தேவையானது என்ற கருத்தை, தமது ஊடகங்களின் மூலம் சீனா பரப்பத் தொடங்கியுள்ளது.

சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்திச் சேவை, கொழும்பிலுள்ள சிலரின் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டவர்கள் அனைவருமே, சீனாவுடனான உறவுகள் அவசியம் என்றும், கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான ஒன்று எனவும், பொருளாதார முன்னேற்றத்துக்கு கைகொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், பொருளாதாரத்தில் திடீர் வளர்ச்சி பெறவேண்டுமானால், அதற்கு சீனாவின் உதவியைப் பெறுவதை விட வேறு தெரிவு ஒன்று கிடையாது என்றும் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் மீளாய்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளது குறித்து சீனா அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

ஆனால், முன்னைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற புதிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று சீன அதிபர், பிரதமர் ஆகியோர் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர்.

எனினும், சிறிலங்கா அரசாங்கம், தமது முடிவில் உறுதியாக உள்ள நிலையில், சீன அரசாங்கம் ஊடகங்களின் மூலம் – மறைமுகமாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *