மேலும்

3 மணிநேரப் பேச்சில் தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வு – விபரங்களை வெளியிட இந்தியா தயக்கம்

Sushma-Mangalaதமிழர்களுடன் அரசியல் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம், இந்தியா வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லியில் நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில், சுமார் 3 மணிநேரமாக சந்திப்பு இடம்பெற்றது.

வழக்கத்துக்கு மாறான முறையில் மிக நீண்டநேரமாக நடந்த இந்தச் சந்திப்பில், இந்திய – சிறிலங்கா உறவுகளை மறுசீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுகுறித்துதகவல் வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன்,

“சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற ஐந்து நாட்களில் மங்கள சமரவீர தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ளார்.

இது சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இந்தியாவுடனான உறவுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்தப் பேச்சுக்களின் போது. அரசியல், பொருளாதார விவகாரங்களில் ஒத்துழைப்பு, சிறிலங்காவில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், இதுகுறித்து புதிய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள முயற்சிகள், சிறிலங்காவில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், மீனவர்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டன.

பேச்சுக்கள் சுமுகமாகவும், நட்புரீதியாகவும் இடம்பெற்றன.

Sushma-Mangala

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை கொழும்பு வருமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள சுஸ்மா சுவராஜ், கூடிய விரைவில் சிறிலங்கா செல்வார்.

சிறிலங்கா அதிபரின் புதுடெல்லிப் பயணம் குறித்தும் இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சிறிலங்கா வருமாறு அழைப்பிதழ் கொண்டு வந்துள்ளார் மங்கள சமரவீர.” என்று தெரிவித்தார்.

அதேவேளை, சிறிலங்காவின் வடக்கு. கிழக்கில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து சிறிலங்கா தரப்பு விபரித்துக் கூறியதாக குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, அதுபற்றி அவர்கள் கூறியது என்ன என்றும், அடுத்த நடவடிக்கை என்ன என்றும் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ஆனால், அதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், தான் சிறிலங்கா அரதசாங்கத்தின் பேச்சாளர் அல்ல என்றும், தனது பக்க நிலையை மட்டுமே தன்னால் கூற முடியும் என்றும், குறிப்பிட்டு அதனை விபரிக்க மறுத்து விட்டார்.

அதேவேளை, “பேச்சுக்களின் தொனி மற்றும் போக்குகள் குறித்த தகவல் தர முடியும்.ஆனால், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் நிலையில் இருந்து, என்னால் பதில் கூறமுடியாது.

அது நியாயமற்றது. அது எமக்கு நல்லதல்ல. அவரே தமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

தமது 100 நாள் செயற்திட்டம் குறித்து அவர் விபரித்திருந்தார். இதன்படி மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளைப் பட்டியலிட்டார். இன்னும் முன்னேற்றம் காண வேண்டிய விடயங்களையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையில் சில இரகசியமான தொடர்புகள் பேணப்படுவது இயல்பு.

எனவே, இதுபற்றிய மேலதிக கேள்விகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடமே எழுப்ப வேண்டும்.” என்றும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *