மேலும்

‘எவர் ஆண்டால் என்ன?’ – ப.திருமாவேலன்

mahinda-maithri‘செருப்பு ஆண்ட நாடு இது, எவன் ஆண்டால் என்ன?’ என தந்தை பெரியார் ஒருமுறை கேட்டார். மக்களும் மக்களாட்சித் தத்துவமும் மரணக் குழிக்குள் தள்ளப்பட்டுவிட்ட இலங்கையில், ஜனவரி 8-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருப்பதை நினைக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.

ஈழத் தமிழர் மனசாட்சியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்‌ஷே, மூன்றாவது முறையாக இலங்கையின் ஜனாதிபதியாகத் துடிக்கிறார். அதற்காக சட்டத்தையே வளைத்துவிட்டார்.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, ஒருவர் இரண்டு முறைதான் ஜனாதிபதியாகத் தொடர முடியும். ஜனாதிபதி ஆட்சிமுறையைக்கொண்டுள்ள பல நாடுகளில் இதுபோன்ற வரைமுறை இருக்கிறது. நிரந்தரமாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஒருவர் சர்வாதிகாரியாக உருவெடுத்துவிடக் கூடாது என்பதே காரணம். விளம்பர வெளிச்சத்தில் தன்னையும் பெரும் செல்வத்துடன் தனது குடும்பத்தையும் மட்டுமே வளர்த்தெடுக்க 24 மணி நேரமும் துடிக்கும் ராஜபக்‌ஷேவுக்கு, அந்த மாண்பு இருக்குமா என்ன?

அந்தப் பதவியை தொடர்ந்து தான் மட்டுமே அனுபவிக்கத் துடிக்கும் ராஜபக்‌ஷே, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 18-வது திருத்தத்தின்படி, ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியும் எனத் தனக்குச் சாதகமாகத் திருத்திவிட்டார். இதைவிட உச்சகட்ட நகைச்சுவை, ‘நான் மூன்றாவது முறை ஜனாதிபதி வேட்பாளராக நிற்கலாமா?’ என உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் ஆலோசனை கேட்டார் ராஜபக்‌ஷே. அவர்களால் ‘முடியாது’ என சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால், அவர்களால் அந்த நாட்டில்தான் இருக்க முடியுமா?

‘ஓ… தாராளமாக நிற்கலாமே, உங்களுக்கு என்ன தயக்கம்?’ எனப் பதில் தந்தார்கள். சிரித்தபடி தேர்தலுக்குத் தயாரானார் ராஜபக்‌ஷே.

கணக்குப்படி பார்த்தால், ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் தானும் தன்னுடைய ஆட்சியும் மொத்தமாக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப்போவோம் என்ற அங்கலாய்ப்பில்தான், உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்தத் திட்டமிட்டார் ராஜபக்‌ஷே. எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களும் இல்லை; மக்களுக்கான மறுமலர்ச்சி இல்லை. விலைவாசி நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. பெரும் முதலீடுகள் வரவில்லை. சீனாவின் பணிகள் அனைத்தும் ராணுவ நோக்கம் கொண்டதாகவே இருக்கின்றன.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தருவதே சிக்கலாகிவருகிறது. ஊழல் குற்றச்சாட்டுகள் நித்தமும் எழுகின்றன. ராணுவம் மற்றும் காவல் துறையின் சட்டமீறல்கள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. இப்படி தனது அரசாங்கம் முழுமையாகச் சிதைந்துவரும் நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் தாமதித்தால், தனது நாற்காலி மொத்தமாக மூழ்கிப்போகும் என நினைத்தார் ராஜபக்‌ஷே. உள்நாட்டில் தனது பெருமையாக ராஜபக்ஷேவால் சொல்லிக்கொள்ள முடிந்த ஒரே விஷயம்… ‘விடுதலைப்புலிகளை ஒழித்து ஈழத் தமிழர்களின் தனிநாடு கோரிக்கைக்கு முற்றுப்புள்ளிவைத்தேன்’ என்பது மட்டுமே. அது மட்டுமே சிங்கள மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள ஒரே கௌரவம். ஆனால், அந்த வெட்டி கௌரவத்தை வறுத்துச் சாப்பிட முடியாது என்பதை சிங்கள மக்கள் முழுமையாகத் தெரிந்து தெளிவதற்கு முன்பே, தேர்தல் தேதியைக் குறித்துவிட்டார்கள்!

தனக்கு எதிரிகளே இல்லை என நினைத்தார் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த ராஜபக்ஷே. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே முடங்கிவிட்டார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் நின்றவரும் ராஜபக்‌ஷேவின் ராணுவத் தளபதியாக இருந்தவருமான சரத் ஃபொன்சேகாவும் இன்னொரு முறை தேர்தலில் நிற்கத் தயாராக இல்லை. முன்னாள் ஜனாதிபதியும் ராஜபக்‌ஷேவின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவருமான சந்திரிகா குமாரதுங்கா களத்தில் நிற்கலாம் என்ற செய்தி பரவியது.

‘சந்திரிகா தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவருக்கு செல்வாக்கு இல்லை. அவர் நின்றால் தனக்கு வெற்றி நிச்சயம்’ என ராஜபக்‌ஷே நினைத்தார். இந்த நிலையில் சந்திரிகா, தனக்கு தேர்தலில் நிற்கும் ஆசை இல்லை எனப் பகிரங்கமாக அறிவித்தார். அப்படியானால் ராஜபக்‌ஷேவை எதிர்க்கத் திறமையான வேட்பாளர் யார், எதிரிகளே இல்லையா… என்ற சூழ்நிலையில், ‘எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சீறிசேனா’ என அறிவிக்கப்பட்டது. ஆடிப்போனார் ராஜபக்‌ஷே!

நரேந்திர மோடியை எதிர்த்து அமித்ஷா போட்டியிட்டால் எப்படி இருக்கும்? அதுமாதிரித்தான் இதுவும். மகிந்த ராஜபக்‌ஷேவின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சீறிசேனா. அந்தக் கட்சியில்

13 ஆண்டுகாலம் பொதுச்செயலாளராகவும் இருந்தவர். ராஜபக்‌ஷேவின் மூன்று சகோதரர்கள், இரண்டு மகன்களின் ஆதிக்கம் தாங்க முடியாமல் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறியவர். இவர் சந்திரிகாவுக்கு மிகவும் நெருக்கமானவர். ஜனாதிபதியாக சந்திரிகா இருந்தபோது, பிரதமராக மைத்திரிபால சீறிசேனாவைக் கொண்டுவரவே திட்டமிட்டார்.

அப்போது, கூட்டணிக் கட்சிகளைத் தூண்டிவிட்டு தனக்கு ஆதரவு இருப்பதாகக் காட்டி பிரதமர் ஆனவர் ராஜபக்‌ஷே. தன்னை சந்திரிகா ஆதரிக்கவில்லை என்பதால், அவரை வீழ்த்த ராஜபக்ஷே முயற்சித்தார்; வீழ்த்தினார். தானே ஜனாதிபதி ஆனார். அன்று எந்த மைத்திரிபாலவின் வாய்ப்பை ராஜபக்‌ஷே தட்டிப்பறித்தாரோ, அந்த மைத்திரிபால இன்று அவரை எதிர்த்தே நிற்பார் என எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் அந்த அதிர்ச்சி!

மைத்திரிபால பெயரை அறிவிக்கும் முன்பு வரை தலை நிமிர்ந்து பேசிவந்த ராஜபக்‌ஷே, ‘நான் ஒருவேளை தோற்றாலும் ஜனநாயக முறைப்படி அடுத்து வருபவரிடம் அரசாங்கத்தை சிக்கல் இல்லாமல் ஒப்படைக்கத் தயாராக இருக்கிறேன்’ என சுருதி இறங்கிச் சொல்ல ஆரம்பித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் இடம்பெறுவது இலங்கை இறுதிப் போர் மட்டும்தான்.

’30 ஆண்டுகாலப் போரை என்னால்தான் முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது. இனவாதம், மதவாதம் பேசி நாட்டில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு சுதந்திரமான அமைதியான வாழ்க்கையைப் பெற்றுக்கொடுத்ததற்காக, என்னை ஜெனிவாவுக்குக் கொண்டுபோக சதி செய்கிறார்கள். நான் தேர்தலில் தோற்றாலும் சர்வதேச நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வேன். ஒருபோதும் இந்த நாட்டைவிட்டு ஓடி ஒளிய மாட்டேன். ஐரோப்பிய நாடுகளும் ஏனைய நாடுகளும் விடுக்கும் கோரிக்கையை ஏற்று, வடக்கில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ளப் போவது இல்லை. நாடு பிரிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, வடக்கில் தொடர்ந்து படைகளை வைத்துள்ளோம்’ எனப் பேசிவரும் ராஜபக்‌ஷே, மறந்தும் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு பற்றி பேசுவதே இல்லை.

இவர்தான் பேசுவது இல்லை என்றால், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபாலவும் இதுபற்றி பேசுவது இல்லை. ராஜபக்‌ஷேவின் குடும்ப ஆட்சி, ஊழல்கள் பற்றி மட்டுமே இவர் பேசுகிறார். ‘மக்கள் பணத்தை அதிகம் செலவு செய்த ஒரே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே. இலங்கை மக்கள் அவரது குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளிவைக்கத் தயாராகிவிட்டார்கள். இது பணக்காரர்களின் அரசாங்கம். இந்திய நடிகர்களை அழைத்து வந்து தேர்தல் பிரசாரம் செய்தாலும் மகிந்த வெற்றி பெற முடியாது’ எனச் சொல்லும் மைத்திரிபால, ‘மகிந்தவை சர்வதேச விசாரணைக்குக் கொண்டுசெல்ல நான் ஒத்துழைக்க மாட்டேன். போர்க்கால நடத்தை பற்றிய விசாரணையை உள்நாட்டு பொறிமுனையில் வைத்துக்கொள்வதே தீர்வு’ என்கிறார். சர்வதேச விசாரணையை மறுப்பதே, தமிழர்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதற்கான தந்திரம்தான். அதனை இலங்கையின் பொது வேட்பாளரும் ஏற்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இவர்கள் இருவரையும் எதிர்த்து இடதுசாரி முன்னணி சார்பில் துமிந்த நாகமுவ என்பவர் போட்டியிடுகிறார். மகிந்தவா அல்லது மைத்திரிபாலவா என்ற நிலையில் துமிந்த வந்தார். முற்போக்கு சோசலிசக் கட்சி, நவசம சமாஜக் கட்சி, இலங்கை சோசலிசக் கட்சி ஆகிய இடதுசாரி இயக்கங்களின் ஆதரவுடன் நிற்கிறார். ‘முகத்தை மாற்றினால் போதும் என எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. அதற்கு மாறாக அமைப்புமுறையை மாற்ற வேண்டும்’ என்கிறார் இவர்.

‘இன்றைய தேர்தல் 20-க்கு 20 கிரிக்கெட் மேட்ச் மாதிரி ஆகிவிட்டது. இந்தக் கட்சியில் இருந்து அந்தக் கட்சிக்கு ஆட்சியை மாற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். மக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் அனைத்து முனைகளிலும் அரசப் பயங்கரவாதம் தலைதூக்கித் தாண்டவம் ஆடுகிறது. மக்களை விழிப்படையச் செய்யும் அனைத்து முயற்சிகளையும் ராணுவம், காவல் துறை, அரசாங்கம் ஆகிய மூன்றும் சேர்ந்து தடுக்கின்றன. ஏகாதிபத்திய அச்சுறுத்தல் பற்றி ராஜபக்‌ஷே பேசுகிறார். இலங்கைத் துறைமுகத்தை ஏகாதிபத்தியத்துக்கு தாரைவார்த்த அவர், ஏகாதிபத்தியம் பற்றி பேசலாமா? ஜனநாயகத்தைப் பற்றி சந்திரிகாவும் ரணிலும் பேசுகிறார்கள். அவர்கள் ஆட்சியில் நடந்த கொலைகளின் பட்டியலும் பெரியது’ என இரண்டு அணிகளையும் தோல் உரித்துவருகிறார்.

இந்தச் சூழ்நிலையில் தலை கவிழ்ந்து நிற்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான். கடந்த தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டார். ஆனால், இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் யாரும் நிற்கவில்லை. யாருக்கு ஆதரவு என்பதையும் சொல்ல முடியவில்லை. ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவர் தனித்து நின்று வெற்றிபெற முடியாது என்பது உண்மை நிலைமையாக இருந்தாலும், தமிழர்களது கோரிக்கையைச் சொல்ல, தமிழர்களது வாக்குகளை வாங்கிக் காட்டுவதன் மூலமாக அவர்களது பிரதிநிதிகள் தாங்கள்தான் என்பதைக் காட்டவாவது யாரையாவது நிறுத்தியிருக்க வேண்டும். இந்தியாவின்  ஆலோசனைப்படியே இவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை எனச் சொல்லப்படுகிறது.

‘இலங்கையில் இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் அதிகமாக நடமாடுவது ஏன்?’ என இடதுசாரி முன்னணி இதனால்தான் கேட்கிறது. இவர்கள் போட்டியிடாததால்தான் ஈழத் தமிழர் பிரச்னை இந்தத் தேர்தலில் ஒரு பேசுபொருளாகவே மாறவில்லை. இது சிங்களர்களுக்கான தேர்தலாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால், தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் புலி ஆதரவாளர்கள் என ராஜபக்‌ஷே சொல்ல மறக்கவில்லை. ‘கருணா, கே.பி., பிள்ளையான் என ராஜபக்‌ஷேவுடன் தான் புலிகள் இருக்கிறார்களே தவிர, எங்களுடன் இல்லை’ என சரத் ஃபொன்சேகா சொல்கிறார்.

அதாவது வெறும் பிரசார ஊறுகாய் ஆகிவிட்டது தமிழர் பிரச்னை. தேர்தல் கூப்பாடுகளில் ஓர் இனத்தின் மரண ஓலம் மறைக்கப்பட்டுவிட்டது. தமிழர்களின் வாக்குகள் ஆளுவதற்கு தேவை இல்லை என்பதால், வாழ்வதற்கும் அருகதை இல்லாதவர்களாக அவர்கள் ஆக்கப்பட்டுவிட்டார்கள். தனியார் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பின்படி 57 சதவிகித ஆதரவு ராஜபக்‌ஷேவுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. மூன்றாவது முறையும் ஆட்சியைப் பிடிப்பது முழுக் குத்தகைக்குக் கொடுப்பதற்குச் சமம்.

கட்டுரையின் முதல் வரியாக இருப்பதுதான் கடைசி வரியும்!

– ப.திருமாவேலன்

ஆனந்த விகடன் – 07 Jan, 2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *