மேலும்

வெள்ளை வான் சர்ச்சையில் வெளிவரும் புதிய தகவல்கள்

white vanமிரிஹான பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு  கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் சிறிலங்கா இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்து வந்தது என்றும், அதிலிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்குச் சொந்தமானது என்றும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கைத்துப்பாக்கி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவினால் கடந்த 15 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.  அவரது சொந்தப் பாதுகாப்புக்காக சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தினால் இது வழங்கப்பட்டது என்றும் விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.

இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வெள்ளை வான் மிரிஹான பிரதேசத்தில் சுற்றித்திரிந்த வேளையில், ஒப்பந்த நிறுவனமொன்றின் வாகனத்துக்குரிய இலக்கத்தகடு பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வானில் இருந்த மூன்று சிறிலங்கா இராணுவ வீரர்களில் ஒருவர், கொமாண்டோ படைப்பிரிவையும், ஏனைய இருவரும் காலாற்படைப் பிரிவையும் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் பொறுப்பு வாய்ந்த பதவி வகித்துவரும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு, சிறிலங்கா இராணுவத்தால் வழங்கப்பட்ட தனிப்பட்ட பாதுகாவலர்களே இவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெள்ளை வான் விவகாரம் அரசியலில் பெரும் பூதாகாரம் எடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு செயலர் யூ.பி.டி.பி.பஸ்நாயக்க மற்றும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த எ சில்வா ஆகியோர், இந்த விவகாரத்தில் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதுதொடர்பான விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு இராணுவ காவல்துறைக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.

இந்த விசாரணைக்குப் புறம்பாக, மிரிஹான காவல்துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மிரிஹான காவல் நிலையத்துக்குச் சென்று மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அதேவேளை, வெள்ளை வானுடன் கைது செய்யப்பட்ட இராணுவத்தினர்  மூவரும் நுகேகொட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

ஆனாலும், அவர்கள் இராணுவக் காவல்துறையினரால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர,Brigadier-Jayanath-jayaweera

“தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைகளில், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மற்றும் மூன்று இராணுவத்தினர் தவறுகள் இழைத்திருந்தமை உறுதி செய்யப்பட்டால், அவர்களின் பதவிநிலையை பாராது இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இராணுவத் தளதி, இராணுவ காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

போலி இலக்கத்தகட்டைப் பயன்படுத்தி குறித்த வாகனத்தில் அந்த இராணுவத்தினர் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் நிலவுகிறது.

கைப்பற்றப்பட்ட வெள்ளை வான் இராணுவத்துக்காக கொள்வனவு செய்யப்பட்டதா- அல்லது வடக்கிலிருந்து கொண்டு வரப்பட்டதா- என்பதை விசாரணைகளின் பின்னரே தெரிவிக்க முடியும்.

இராணுவ வாகனங்களுக்கு சில சந்தர்ப்பங்களில் சில அதிகாரிகள் சிவில் இலக்கத்தகடுகளைப் பொருத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவ்வாறு செய்யக் கூடாதென்று இராணுவத் தலைமையகம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவோ, வேறு உயர் அதிகாரிகளோ தமது தனிப்பட்ட ஆயுதத்தை பாதுகாப்பு அமைச்சுக்கோ தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கோ கொண்டு செல்ல முடியாது.

அவ்வாறான சந்தர்ப்பத்தில் மட்டும் அந்த ஆயுதத்தை தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியிடம் கையளித்து விட்டுச் செல்ல வேண்டும்.

அந்த அதிகாரிகூட இந்த ஆயுதத்தை பயன்படுத்தும் முறையை நன்றாகப் பயிற்சிபெற்றவராக இருக்க வேண்டும்.

போலி இலக்கத் தகட்டைக் கொண்ட வாகனம் அரசியல் நடவடிக்கைக்காகவோ அல்லது தனிநபரின் பாதுகாப்புக்காகவோ பயன்படுத்தப்படவில்லை என்பது ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப் படும்” என்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *