மேலும்

ஜேவிபியினருக்கு கட்சி அமைப்பு, ஒழுக்கம் குறித்து பாடம் எடுக்க வருகிறது சீனக் குழு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழு ஒன்று, ஜேவிபி உறுப்பினர்களுடன் கட்சி அமைப்பு மற்றும் ஒழுக்கம் குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, விரைவில் சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளது.

பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில், நேற்று  ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவா சியாங் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின் போது, இந்த மவருகை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 29 ஆம் நாள் சீனாவில் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் ஐந்தாவது முழு அமர்வில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடுமையான உள் ஒழுக்கத்தைப் பேணுவது மற்றும் அதன் அமைப்புசார் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான கட்சியின் அணுகுமுறை குறித்து சீனத் தூதுவர், ரில்வின் சில்வாவுக்கு விளக்கமளித்துள்ளார்.

இந்தக் கொள்கைகள் குறித்து மேலும் விளக்கமளிப்பதற்கும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவங்களை ஜேவிபி உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் , சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழு ஒன்று சிறிலங்காவுக்கு வருகை தரும் என எதிர்பார்க்கப்படுவதாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

முதலீடு, தொழில்நுட்பம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது உட்பட, சிறிலங்காவுக்கும்சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், சீனத் தூதுவரும் ரில்வின் சில்வாவும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தத் துறைகள் அனைத்திலும் சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதில் சீனாவின் உறுதிப்பாட்டை சீனத் தூதுவர் வெய் மீண்டும் வலியுறுத்தினார் என ரில்வின் சில்வா தெரிவித்தார்.

சிறிலங்காவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சீனா வழங்கிய உதவிக்கு ரில்வின் சில்வா பாராட்டு தெரிவித்ததோடு, ஜேவிபி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையேயான நீண்டகால உறவையும் எடுத்துரைத்தார்.

இந்தக் கூட்டத்தில், சீனத் தூதரக ஆலோசகர் மேய் ஜிங், அரசியல் பிரிவுத் தலைவர் கின் லிகோங், இரண்டாம் செயலாளர் ஜின் என்சே மற்றும் அதிகாரி லி ஜியானி உள்ளிட்ட பல சீனத் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *